`யார் நல்ல பில்டர்?' – உங்கள் கனவு இல்லத்தை கட்டும் முன் இதை முக்கியமா கவனிங்க!

‘நான் பாத்து பாத்து கட்டுன வீடு… இப்படி ஆயிடுச்சே’ என்று புலம்பாமல் இருக்க வேண்டும் என்றால், அதற்கு நம்பகத்தன்மையுள்ள பில்டரைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில் வீடு கட்டுவதில் மிக முக்கியமாக பங்கு வகிப்பவர்கள் பில்டர்கள்தான். மழையில் முளைக்கும் காளான்கள் போல, பல பில்டர்கள் நம்மைச் சூழ்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் சரியானவர்களை நாம் எப்படித் தேர்வு செய்வது என விளக்குகிறார் தமிழ்நாடு ஃப்ளாட் புரமோட்டர்கள் சங்கத்தின் தலைவர் பி.மணிசங்கர்.

மணிசங்கர்

“சொந்தமாக வீடு கட்டிவிட வேண்டும் என்கிற பெரும் கனவை நிஜமாக்கிவிட வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு பலர் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி சம்பாதிக்கும் பணத்தில் வங்கிக் கடனுக்கு செலுத்தவேண்டிய முன்பணத்தை முதலீட்டின் மூலம் சேர்த்து பலர் வீட்டுக்கடன் வாங்கி வீடு கட்டிக் கொள்கிறார்கள்.

ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே  வீட்டின் கூரையில் இருந்து நீர் வடிய ஆரம்பிக்கும். வீட்டு சுவர்களில் விரிசல் விழும். இந்த மாதிரியான குளறுபடிகள் நடக்காமல் இருக்க சரியான பில்டரைத் தேர்வு செய்வது முக்கியம்” என்றவர், யார் நல்ல பில்டர் என்பதை தெளிவாக சொன்னார்.

யார் நல்ல பில்டர்?

ஒரு பில்டர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா என்பதை அறிவதற்கு அவர் இதற்கு முன்பு கட்டித்தந்த வீடுகள் முக்கியமான பங்கு வகிக்கிறது. உதாரணமாக, அந்த பில்டர் எவ்வளவு திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறார்கள், வாடிக்கையாளரின் நிறைகுறைகளை எவ்வாறு அணுகியிருக்கிறார்கள் என்பதெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடியவை. இதையெல்லாம் வைத்துத்தான் அந்த பில்டர் நல்லவரா அல்லது நம்பகத்தன்மை அற்றவரா என்பதை கண்டுபிடிக்க முடியும்.

பில்டர்

மேலும், நீங்கள் தேர்வு செய்யும் பில்டர் ஏற்கெனவே சொன்ன தேதியில் வீடுகளைக் கட்டி முடித்திருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வங்கிக் கடன் வாங்கி பில்டருக்குத் தந்துவிட்டோம் அவர் சரியான நேரத்தில் கட்டித் தந்துவிட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

நம்பகத்தன்மை  முக்கியம்!

பொதுவாக, எல்லாத் துறைகளைப் போலவும் இதிலும் பில்டருடைய அனுபவமே முதன்மை வகிக்கிறது. மேலும், அந்த பில்டர் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறாரா, அவருக்கு மக்களிடையே நம்பகத்தன்மை இருக்கிறதா என்பதெல்லாம் அலசி ஆராய்தல் வேண்டும். நீங்கள் தேர்வு செய்யும் பில்டரின் மீது நுகர்வோர் மன்ற வழக்குகள் ஏதும் இல்லாமல் இருப்பது அவசியம்.

பில்டர்

முக்கியமாக, ‘ஒரு பில்டரிடம் பேசி முடித்து வீடு கட்ட ஒப்படைத்த பிறகு, இதற்கு இவ்வளவு கூடுதல் செலவாகும், அதற்கு இவ்வளவு கூடுதல் செலவாகும் அந்தத் தொகையை நீங்கள்தான் தர வேண்டும்’ என்று சொல்லுகிற மாதிரியான பில்டர்கள் இங்கு நிறைய பேர். அப்படியான நபரைத் தயவு செய்து தேர்வு செய்து விடாதீர்கள். ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான ஒப்பந்தத்தை செய்தபிறகு பேசிய விலைக்குள் தரமான வீட்டை கட்டி முடித்துக் கொடுப்பதுதான் ஒரு நல்ல பில்டரின் திறமை.

பில்டரிடம்தான் வீட்டைக் கட்ட ஒப்படைத்துவிட்டோமே, அவர் முழுமையாக வீட்டை கட்டிமுடித்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் வீட்டின் உரிமையாளர் சும்மா இருக்க கூடாது. நாம் கொடுத்த லேஅவுட் டிசைன் படி வேலை நடக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

அதே போல, பில்டரும் அந்த வீட்டின் உரிமையாளரும் சேர்ந்து வீட்டின் கட்டுமானப் பணிகளைக் கலந்தாலோசித்து செயல்படுத்தும்போது கட்டுமான நடவடிக்கைகளில் தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். அதே போல, வீட்டின் ஹால் அளவுகள், பெட்ரூம் அளவுகள், கதவின் அளவுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதெல்லாம் வீட்டின் உரிமையாளர்கள் சரி பார்க்க வேண்டும்.

ரியல் எஸ்டேட்

வீட்டின் உரிமையாளர்கள் பில்டர்களிடம் ஏதாவது சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பில்டராக இருத்தல் அவசியம். ஒரு பில்டருக்குப் பொறுமை மிகவும் முக்கியம்.

வீட்டின் உரிமையாளர்கள் ஏதேனும் சந்தேகக் கேள்விகளை முன்வைக்கும்போது அதற்கு பொறுமையாக பதிலளிக்க வேண்டியது பில்டரின் கடமையாகும். இவற்றையெல்லாம் கடைப்பிடிக்கும், பொறுமையைக் கையாளும் பில்டர்களே பெஸ்ட் பில்டர்கள்” என்கிறார் மணிசங்கர்.

பில்டர் ஸ்ட்ராங்காக இருந்தால்தான், பில்டிங்கும் ஸ்ட்ராங்காக இருக்கும். அதனால், கனவு இல்லத்தை பில்டரை வைத்துக் கட்டும் போது மேலே சொன்னத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

– சையத் சஜானா

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.