புதுடெல்லி: இந்தியா இதுவரை 10 லட்சம் கிலோ போதைப் பொருளை அழித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு வானொலியில் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று (ஜூலை 30) அவர் உரையாற்றுகையில், “மக்கள் போதைப் பழக்கங்களைக் கைவிட்டு உடலைப் பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இந்தியா 10 லட்சம் கிலோ போதைப் பொருட்களை அழித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா இந்தியாவிடம் திருப்பி வழங்கிய தொன்மையான பொருட்கள் பற்றி சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அவை அனைத்தும் இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டவை. 250 ஆண்டுகள் முதல் 2500 ஆண்டுகள் வரை பழமையானது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்ததாகும்” என்றார்.
இந்தியாவின் பருவமழை பாதிப்புகள் தொடர்பாக பேசிய பிரதமர், “கடந்த சில் நாட்களாகவே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயற்கைப் பேரிடர்களால் பாதிப்பு ஏற்பட்டது. யமுனை உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. மலைப்பிரதேசங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்காலங்களில் மக்கள் நீர் சேமிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஹஜ் கொள்கையில் சவுதி அரேபிய அரசு மாற்றம் செய்திருக்கின்றது. இதுவரை 4000 முஸ்லிம் பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 15 நாம் சுதந்திர தினத்தைக் கொண்டாடவிருக்கிறோம். இந்தச் சூழலில் நாம் வீடுதோறும் தேசியக் கொடி பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து எல்லா வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவோம்” என்றார்.