வீடுகளில் மின்சார பயன்பாட்டை கணக்கிட ஸ்மார்ட் மின் மீட்டர் பொருத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மின் மீட்டர் கணக்கீடுகளில் நடைபெறும் குளறுபடிகளை தடுக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் உள்ள மின் வாரியங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்துவதற்கான பணிகளை மின்வாரியம் தொடங்கியது. கடந்த ஜுன் மாதம் இதற்கான டெண்டர் கோருதல் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் மூன்று தொகுப்புகளாக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த மின் வாரியம் முடிவு செய்திருந்தது.
இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கான டெண்டரில் பங்கேற்க கடந்த 5 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த டெண்டருக்கான கடைசி தேதி 3 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டரை மின்வாரியம் ரத்து செய்துள்ளது.
டெண்டர் விளக்க கூட்டத்தில் பங்கேற்ற 40க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 265 சந்தேகங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவனங்கள் எழுப்பிய சந்தேகங்களின் அடிப்படையில் டெண்டர் விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய டெண்டர் கோர மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
மேலும் மூன்று தொகுப்புகளாக ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கு பதில் ஒரே தொகுப்பாக பொருத்தவும் மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் விரைவில் கோரவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி மேலும் தாமதாமாகும் என தெரிகிறது.