பொதுவாக திருநங்கைகள் என்றால் சிக்னலில் நின்று, வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்குபவர்கள், இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை மிரட்டி பணம் பறிப்பவர்கள், மோசமான தொழில் செய்பவர்கள் என்ற எண்ணம் பலருக்கும் உள்ளது.
ஆனால் சில திருநங்கைகள் சொந்தமான சுயதொழில் செய்வது, வேலைக்கு சென்று உழைத்து சம்பாதிப்பது என்று, தங்களால் இயன்ற வேலைகளை செய்து, வாழ்க்கையை நடத்துகின்றனர். சிலர் கல்வியிலும் உயர்ந்த நிலையை எட்டி உள்ளனர்.
இந்நிலையில் திருநங்கை ஒருவர் ஆட்டோ ஓட்டி, மற்ற திருநங்கைகளுக்கு முன் உதாரணமாக திகழ்கிறார்.
உடுப்பியின் பிரம்மாவர் தாலுகா சேர்கடி கிராமம், பெத்ரி பகுதியில் வசிப்பவர் காவேரி மேரி டிசோசா, 37. இவர் திருநங்கை ஆவார். பிறப்பில் ஆணான இவருக்கு 15 வயதாக இருக்கும் போது, பாலினத்தில் மாற்றம் ஏற்பட்டது.
பெண்ணாக மாறுவதை உணர்ந்தார். அதன்பின்னர் மைசூரை சேர்ந்த, தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், பெங்களூரில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
அதன்பின்னர் பெங்களூரில் சக திருநங்கைகளுடன் வசித்தார். ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் பணியாற்றினார்.
இதன்பின்னர் சொந்தமாக ஏதாவது வேலை செய்ய வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, சொந்த ஊரான பெத்ரிக்கு திரும்பி வந்தார். சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட முடிவு செய்தார். ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், வங்கியில் கடன் பெற்று ஆட்டோ வாங்கினார். கடந்த மூன்று மாதங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
காவேரி மேரி டிசோசா கூறியதாவது:
மாநிலத்தின் முதல் திருநங்கை ஆட்டோ டிரைவர் நான் தான். ஆட்டோ ஓட்டுவதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே கற்றுக்கொண்டேன். ஆனால் எளிதில் ஓட்டுனர் உரிமம் பெற முடியவில்லை. பல போராட்டங்களுக்கு பின், ஓட்டுனர் உரிமம் கிடைத்தது. நான் ஆட்டோ வாங்க உதவிய, தொண்டு நிறுவனத்திற்கு நன்றி.
திருநங்கைகள் சமூகத்தில் சுயசார்பு வாழ்க்கை, வாழ வேண்டும் என்பது எனது குறிக்கோள். திருநங்கைகளுக்கு முன் உதாரணமாக திகழவே ஆட்டோ ஓட்டுகிறேன். எனது ஆட்டோவில் பயணம் செய்யும் பயணியர், என்னை வெகுவாக பாராட்டுகின்றனர். இது எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்