LGM: தோனி வைரம் மோதிரம் கொடுக்கிறாரா..? மன்னன் பட ஸ்டைலில் LGM படக்குழு கொடுத்த டாஸ்க்!

சென்னை: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்றுவிட்ட தோனி தற்போது திரைப்பட தயாரிப்பில் இறங்கிவிட்டார்.

அவரது தோனி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள எல்ஜிஎம் திரைப்படம் இந்த வாரம் வெளியானது.

ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு, நதியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், LGM பட ரசிகர்களுக்கு வைர மோதிரம் போட்டியை தோனியின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

தோனி வைரம் மோதிரம் கொடுக்கிறாரா..? : கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி, இப்போது திரைப்படத்துறையில் தடம் பதித்துள்ளார். தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற பெயரில் அவர் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக வெளியாகியுள்ளது எல்ஜிஎம். ஹரிஷ் கல்யாண், இவானா நதியா, யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள எல்ஜிஎம், இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. காதல் ப்ளஸ் ஃபேமிலி சென்டிமெண்ட் ஜானரில் உருவாகியுள்ள LGM படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. காதலர்களுக்குள் எழும் பிரச்சினையை அதிகம் பேசாமல், மாமியார், மருமகள் ஆகியோரின் உணர்வுகளை பேசுவதே இப்படத்தின் மையக்கரு ஆகும். ஆனால், நல்ல கதையை தேர்வு செய்த இயக்குநர், திரைக்கதையில் ரொம்பவே சொதப்பிவிட்டார்.

ஜூலை 28ம் தேதி வெளியான எல்ஜிஎம், பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்தளவில் வசூல் செய்யவில்லை. இதனால், மன்னன் பட ஸ்டைலில் ஒரு போட்டியை அறிவித்துள்ளது எல்ஜிஎம் படக்குழு. மன்னன் படத்தில் ரஜினியும் கவுண்டமணியும் சேர்ந்து ‘சின்ன தம்பி’ படம் பார்க்கச் செல்வார்கள். அங்கு முதல் இரண்டு டிக்கெட்டுகளை எடுக்கும் ரசிகர்களுக்கு தங்க மோதிரமும் தங்கச் செயினும் கொடுக்கப்படும்.

அதேபோல் ஒரு போட்டியை அறிவித்துள்ள எல்ஜிஎம் படக்குழு, வெற்றி பெறும் ரசிகர்களுக்கு வைர மோதிரம் பரிசாக கொடுக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளது. அதாவது மாமியார் அல்லது மருமகளை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தையும், அதன்பின்னர் தங்களது உறவை அவர்கள் எப்படி வளர்த்துக்கொண்டார்கள் என வீடியோவாக அனுப்ப வேண்டுமாம்.

எல்ஜிஎம் படத்தின் பின்னணி இசையுடன் அனுப்பும் போட்டியாளர்களில், சிறந்த 6 நபர்களுக்கு JCS நிறுவனம் வழங்கும் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் இந்தப் போட்டியில் பங்குபெறும் விதிமுறைகளையும் விரிவாக தங்களது டிவிட்டர் பக்கத்தில் தோனி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் அறித்துள்ளது. இப்போது முதல் ஆகஸ்ட் 3ம் தேதி நள்ளிரவு வரை வீடியோக்கள் அனுப்பலாம் எனவும், 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் மாமியார், மருமகள் என்ற ரீதியில் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால், பலரும் போட்டிப் போட்டு வீடியோ அனுப்பி வருகின்றனர். இப்போட்டியில் வென்று வைர மோதிரம் வெல்லப் போகும் அந்த 6 அதிர்ஷ்டசாலிகள் யார் என்பது ஆகஸ்ட் 4ம் தேதி தெரிந்துவிடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.