சென்னை விமான நிலையத்தில் அண்மையில் பி.வி.ஆர் சினிமாஸ் (PVR Aerohub) என்ற புதிய மல்டிபிளக்ஸ் திரையரங்கம் திறக்கப்பட்டது. ஐந்து ஸ்க்ரீன்கள் கொண்ட இந்தத் திரையரங்கை பி.வி.ஆர் சினிமாஸ் விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் வசதிக்காகத் திறந்தது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்தத் திரையரங்கம் செயல்பட்டு வருகிறது.
இந்தத் திரையரங்கிற்கு விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மட்டுமின்றி வெளியில் உள்ள பொதுமக்களும் வந்து படம் பார்த்துச் செல்கின்றனர். இதனால் இந்த அரங்கம் எப்போதும் கூட்டமாகக் காணப்படும். வார இறுதி நாள்களில் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும். இந்தத் திரையரங்குக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய வாகனங்களை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குச் சொந்தமான ஆறு அடுக்கு கார் பார்க்கிங்கில்தான் நிறுத்திச் செல்கின்றனர். இந்த கார் பார்க்கிங் 250 கோடி ரூபாயில் விமான நிலையைப் பணிகளுக்காகவும், பயணிகளுக்காகவும் கட்டப்பட்டது. திரையரங்கிற்குப் படம் பார்க்க வரும் மக்கள் இந்த பார்க்கிங் வசதியைப் பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் விமான நிலையத்துக்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்குப் போதிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் போகிறது.
இது தொடர்பாகப் பல புகார்களை சென்னை விமான நிலைய அதிகாரிகள் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இதனால், ஆறு அடுக்கு கார் பார்க்கிங் உள்ள திரையரங்கை மூடச் சொல்லி சென்னை விமான நிலைய அதிகாரிகள் சார்பாகக் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. முறையாக அனுமதி வாங்கிக் கட்டப்பட்ட திரையரங்கை மூடச் சொல்லி கடிதம் வந்ததைத் தொடர்ந்து, பி.வி.ஆர் சினிமாஸ் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து உள்ளது. இது குறித்துப் பேசுவதற்காக பி.வி.ஆர் சினிமாஸ் உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம்.
“வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இது சம்பந்தமாகத் தற்போது பேச முடியாது” எனத் தெரிவித்தனர்.