சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து ‘UPSC / TNPSC group I & II தேர்வுகளில் வெல்வது எப்படி’ என்கிற இலவச பயிற்சி முகாமினை இன்று திருச்சியில் நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு M. பிரதீப் குமார் IAS , திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் திருமதி M. சத்தியபிரபா IPS, திரு V . நந்தகுமார் (IRS Commissioner of income tax. Govt of India) மற்றும் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர் சத்யஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றி மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கினர்.
வருவாய்த்துறை ஆணையர் நந்தகுமார் IRS பேசுகையில், “மாணவர்கள் எதைப் படித்தாலும் நன்றாக படிக்க வேண்டும். ஒரு கேள்விக்கு சுருக்கமாகவும், தெளிவாகவும், விரிவாகவும் பதில் சொல்லும் திறனை வளர்த்து கொள்ள வேண்டும். என் வாழ்க்கையில் வெற்றி பெறும் வரையில் என்னிடமுள்ள குறைகளை யாரிடமும் நான் கூறியதில்லை. வெற்றி பெறும் வரை நான் பட்ட அவமானங்கள் சொல்லி மாளாது.

50 சதவிகித பெண்கள் நிறைந்திருக்கும் அரங்கைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இந்த வருட UPSC தேர்வு முடிவுகளில் முதல் நான்கு இடங்களைப் பெண்கள் தான் பிடித்திருந்தனர். இந்த வருட UPSC தேர்வில் 210 மதிப்பெண் எடுத்த 4 மாணவர்கள் தொலைத் தொடர்பு வசதி கூட இல்லாத இடத்திலிருந்து வந்த மலைவாழ் மக்கள் தான். எனவே, நீங்கள் எங்கிருந்து வந்தாலும் உங்களாலும் சாதிக்க முடியும்” கூறினார்.
காவல்துறை ஆணையர் M. சத்தியபிரியா IPS பேசுகையில், “நான் இங்கு இந்த நிலையில் நிற்பதற்கு தனது பெற்றோர்கள் தான் காரணம். எனது பள்ளிப் பருவத்தில் 75 சதவிகிதம் நான் விளையாட்டில் தான் கவனம் செலுத்தினேன்.

அதே சமயத்தில் நன்றாகப் படித்து மதிப்பெண்களையும் தக்கவைத்துக் கொள்வேன். எதைப் படித்தாலும் தெளிவாக படியுங்கள். எங்கெல்லாம் நீங்கள் துவண்டு விடுகிறீர்களோ அப்போது எல்லாம் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் குறிக்கோளில் தீவிரமாக இருங்கள். இலக்கை அடைய உத்திகளை கையாளுங்கள்” என்றார்.
இறுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு .M .பிரதீப் குமார் IAS பேசுகையில், ” எந்த ஒரு மனிதனாலும் 45 நிமிடங்களுக்கு மேல் ஒரு செயலில் கவனம் செலுத்த முடியாது. எனவே, சிறிது நேரம் படித்தாலும் கவனத்துடன் படியுங்கள். என் தந்தையின் ஆசைக்காகத்தான் நான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன்.

தான் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு UPSC தேர்விற்காகத் தயார் செய்தேன். எந்த ஒரு பாடமாக இருந்தாலும் நேசித்துப் படியுங்கள். பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துவதை நிறுத்துங்கள். சுய கட்டுப்பாடு என்பது மிகவும் முக்கியம். வேகம் விவேகத்தைவிட கடின உழைப்பே வெற்றி பெறச் செய்யும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.