ரயில் எண் 12956 கொண்ட ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் பல்கார் ரயில் நிலையத்தை தாண்டி இன்று (ஜூலை 31) காலை சென்று கொண்டிருந்தது. அதில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து ரயில்வே பாதுகாப்பு படையின் மற்றொரு துணை காவல் ஆய்வாளரை நோக்கி சுட்டுள்ளார்.
அதன்பிறகு 3 பயணிகள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிகிறது. பின்னர் ஓடும் ரயிலில் இருந்து வெளியில் குதித்து தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அருகிலுள்ள ரயில் நிலையத்தில் ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ரயில் பெட்டியில் ரத்த கறையாக காட்சி அளித்தது சக பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அனைவரும் அச்சத்தில் உறைந்தனர்.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், குற்றவாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரயில்வே பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரிடம் இருந்த துப்பாக்கி பறிக்கப்பட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓடும் ரயிலில் நடந்த துப்பாக்கிச்சூடு, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த உயிரிழப்புகள் வட இந்தியாவில் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.