`ஓபிஎஸ் போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டவே மதுரையில் அதிமுக மாநாடு!' – தேனியில் கே.பி.முனுசாமி

க​டந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். அப்போது தேனியில் நடந்த அறிமுகக் கூட்டத்தில் ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய இருவரும் ஒன்றாக மேடையேறினர். அதன் பிறகு நாளை நடைபெறவிருக்கும் தி.மு.க-வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் இருவரும் ஒன்றாக மேடையேறவிருக்கின்றனர். இந்த நிலையில், அ.தி.மு.க பொன்விழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20​-ம் தேதி மதுரையில் எழுச்சி மாநாடு நடைபெறவிருக்கிறது. ​தேனி மாவட்ட அ.தி.மு.க ​சார்பில் இ​ந்த மாநாட்டுக்கு தொண்டர்களை ஒருங்கிணைப்பது, அழைத்து வருவது தொடர்பா​க நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஓ.பி.எஸ், டி.டி.வி குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருக்கின்றனர். 

கூட்டம் நடந்த தனியார் மஹால்

இந்தக் கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன்​, “அரசியலில் விபத்துபோல ஒருவரை முதலமைச்ச​ராகவும், கட்சித் தலைமைக்கும் கொண்டு வந்தோம். ஓ.பி.எஸ் முடிந்துபோன சகாப்தம், அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.​ செத்த பாம்பை அடித்து என்ன பயன்.​ எம்.பி தேர்தலில் அவரின் மகனை, பண பலம் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்தி வெற்றி பெற​ வைத்தார். ​கட்சியினர் யாரையும் வெற்றி பெற செய்யவில்லை​. கட்சித் தொண்டர்களுக்கு எதுவும் செய்யவில்லை. ​கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ​எம்.பி தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட தங்கதமிழ்ச்செல்வன் தோல்விக்குக் காரணம் ஓ.பி.எஸ்-தான் என்று, ஜெயலலிதாவால் `துரோகி’ எனப் பட்டம் ​வாங்கியவர் ஓ.பி.எஸ். அதன் பின்னரும், தன் சுயநலத்துக்காக தேனி மாவட்ட அ.தி.மு.க-வை வலுவிழக்கச் செய்ய முயன்றார். அதனை அறிந்த ஜெயலலிதாவால் பலமுறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு, எச்சரிக்கப்பட்டார். 

தர்மயுத்தக் காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற தனி மனிதனுக்காக, அன்று அவருடன் நாங்கள் செல்லவில்லை. கட்சியில் ஆதிக்கச் சக்திகள் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் அன்று அவருக்கு ஆதரவு கொடுத்தோம். ஜெயலலிதா சொல்வதுபோல் நூறாண்டுக்காலம் கட்சி இருக்க வேண்டும் என்றால், மன்னார்குடி குடும்பம் கட்சியில் இருக்கக் கூடாது.​ இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி, பெரியகுளத்தில் அ.தி.மு.க தோல்வியடைந்ததற்குக் காரணம் ஓ.பி.எஸ். தான் முதல்வராக வரவில்லை என்றால், அ.தி.மு.க-வே ஆட்சிக்கு வரக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் ஓ.பி.எஸ். அவர் செய்த துரோகம் காரணமாக அவர் மகனின் எம்.பி பதவி செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. ராமன் இருக்கும் இடம்தான் அயோத்தி, அதுபோல் எடப்பாடி இருக்கும் இடம்தான் அ.தி.மு.க”​ என்றார். 

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்​ பேசுகையில், “சசிகலா குடும்பத்தால்தான் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். தினகரனால் அடையாளம் காட்டப்பட்டவர்தான் ஓ.பி.எஸ். இந்த மாவட்டத்துக்கு அவர் செய்த சாதனைதான் என்ன… போடியில் தப்பித்தவறி வெற்றிபெற்று விட்டார். எம்.ஜி.ஆரைப் பற்றி பேசுவதற்கு, ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு ஓ.பன்னீர்செல்வத்துக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் என்ன தகுதி இருக்கிறது. 

`எடப்பாடி முதல்வராக நான் ஏன் தேர்தலில் உழைக்க வேண்டும்?’ என்று இருந்தவர் ஓ.பி.எஸ். தை​ரியம் இருந்தால் ஓ.பி.எஸ் தனி கட்சி தொடங்கி வெற்றி பெறட்டும்” எ​ன்றார். 

கூட்டத்தில் பங்கேற்ற கட்சியினர்

கே​.பி​.முனிசாமி பேசுகையில்​, “எதிரிகளிடம் நம் பலத்தைக் காட்டுவதற்காகவும், துரோகிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டிய நிலையிலும் நாம் இருக்கிறோம். எம்.ஜி.ஆர் உடன் இருந்த ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவை ஏற்றுக்கொள்ளாமல்,  ஜானகியை முதலமைச்சர் ஆக்கினார். அதனால் கட்சியில் பிளவு ஏற்பட்டு, சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் ஜெயலலிதா முதல்வரான பிறகு, அவரை மன்னித்து மூத்தவர் என்று ஆர்.எம்.வீரப்பனை கட்சியில் சேர்த்து அமைச்சர் பதவி வழங்கினார். ஆனால் அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த ரஜினிகாந்துக்கு ஆதரவாகப் பேசியதால், அமைச்சர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கினார்.​ அ.தி.மு.க-வை அழிக்க வேண்டும் என்று நினைத்தால், ஆர்.எம்.வீரப்பனுக்கு நேர்ந்த நிலைதான் தற்போது ஓ.பி.எஸ்-க்கும்​ ஏற்படும். 

தன்னுடைய முதல்வர் பதவி பறிபோன பிறகுதான், அம்மா ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று கூறினார் ஓ.பி.எஸ். தர்மயுத்தத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை வெளியேற்ற வேண்டும் எனக் கூறியவர்தான் ஓ.பி.எஸ். சசிகலா சிறைக்குச் சென்ற பின்பு அ.தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறி வந்தார். ஆனால் அவரால் அது கடைசி வரையில் முடியவில்லை. ​கட்சி பிளவுபடக் கூடாது என்றுதான் ஓ.பி.எஸ்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போது துணை முதல்வர், நிதித்துறை, வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் என உயரிய பதவிகள் வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்

முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்ற கேள்வி வந்தபோது, தான் முதல்வராக வேண்டும் என ஒருபோதும் எடப்பாடி நினைக்கவில்லை. ஓ.பி.எஸ்ஸிடம் கேட்டோம், `அதைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்’ என​க் கூறினார். ​ ஓ.பி.எஸ் ​போன்ற துரோகிகளுக்குப் பாடம் புகட்டுவதற்காகத்தான் இந்த மாநாடு.​ ​பகவத்கீதை கூற்றுப்படி துரோகியான ஓ.பி.எஸ் அழிக்கப்பட வேண்டும். எடப்பாடியை அழிக்க நினைத்தால் ஓ.பி.எஸ்ஸாக இருந்தாலும், டி.டி.வி-யாக இருந்தாலும் காணாமல்போய்விடுவார்கள்” என்​றார்.

மேலும் ​இந்தக் கூட்டத்தில் ​முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார்​, செல்லூர் ராஜூ​, ​வளர்மதி,​வேலுமணி​, தங்கமணி, செங்கோட்டையன்​ உள்ளிட்டோர் ஓ.பி.எஸ்ஸுக்கு எதிராகப் பேசினர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.