கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவாநல்லூர் செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.

தஞ்சாவூரில் திங்கள் கிழமை செய்தியாளர்களிடம் ப.சஞ்சய்காந்தி கூறியதாவது, “இந்தியாவில் 450-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 28-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஜடேரி திருமண் (நாமகட்டி) தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும், 2021, ஜூன் 15-ம் தேதி தமிழ்நாடு அரசின் கைத்தறி துறை உதவியுடன் திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் சவுராஷ்டிரா நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்கம் சார்பில் செடிபுட்டா சேலைக்கும், 2021, ஏப்ரல் 29-ம் தேதி மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் அமைப்பு சார்பில், கன்னியாகுமரி மட்டி வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்ற பொருட்களை காட்டிய அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் ப.சஞ்சய்காந்தி.

இந்த மூன்று பொருட்களுக்கான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், மத்திய அரசின் அரசிதழில் கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. தற்போது நான்கு மாதங்கள் கடந்த நிலையில், விண்ணப்பங்களுக்கு மறுப்புகள் எதுவும் வராத நிலையில், ஜடேரி நாமகட்டி, செடிபுட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்து உள்ளது. இம்மூன்று பொருட்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இப்பொருட்களின் விற்பனை விலை உயரும். இப்பொருட்களுக்கென்று உள்ள தனி சட்டப்பாதுகாப்பு கிடைக்கும்.

இப்பொருட்களை உலக அளவில் விற்பனை செய்ய உலக நாடுகள் அங்கீகாரம் வழங்கும். எனவே குறிப்பிட்ட இடங்களில் உற்பத்தி செய்யும் பகுதியை தவிர மற்ற பகுதியில் வேறு யாராவது தயாரித்து அந்தப் பொருளை விற்கும்போது இந்த குறிப்பிட்ட பெயரை பயன்படுத்த முடியாது. இதேபோன்று காவிரி படுகையில் அமைந்துள்ள மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கிடைக்ககூடிய தனிச்சிறப்புடைய விவசாய, கைவினை, கைத்தறி, உணவுப்பொருட்கள் போன்றவற்றை அடையாளம் கண்டறிந்து அவற்றையும் புவிசார் குறியீடு பதிவகத்தில் விண்ணப்பித்தால், தமிழகத்திலேயே அதிக புவிசார் குறியீடு பெற்ற மாவட்டங்களாக, டெல்டா மாவட்டம் திகழும் என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.