கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராகப் பணியாற்றியவர் மகிதா அன்ன கிறிஸ்டி. இவரின் கணவரும் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட ஒரு வழக்கில் சிறுமிக்கு கருக்கலைப்பு நடந்த தகவல், இன்ஸ்பெக்டர் மகிதாவுக்குத் தெரியவந்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் மகிதா, பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரித்தார். அதன் பிறகு சிறுமிக்கு எந்த மருத்துவமனையில் கருக்கலைப்பு நடந்தது என்ற விவரங்களைச் சேகரித்த இன்ஸ்பெக்டர் மகிதா, கருக்கலைப்பு குற்றச்சாட்டில் சிக்கிய டாக்டர்களிடம் விசாரித்தார். அப்போது, “சட்டத்துக்குப் புறம்பாக சிறுமிக்குக் கருக்கலைப்பு நடந்திருக்கிறது. இந்தத் தகவல் என்னுடைய உயரதிகாரிகள் அனைவருக்கும் தெரியும். அதனால் உங்கள்மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க, 20 லட்சம் ரூபாய் மாமூலாகக் கொடுங்கள்” என்று இன்ஸ்பெக்டர் மகிதா மிரட்டியதாகச் சொல்லப்படுகிறது.
இன்ஸ்பெக்டரின் மிரட்டலுக்குப் பயந்த டாக்டர்கள் தரப்பு, 12 லட்சம் ரூபாய் வரை கொடுத்ததாகத் தெரிகிறது. இன்ஸ்பெக்டருக்குப் பணம் வாங்கிக் கொடுக்கும் வேலையை வழக்கறிஞர் பன்னீர்செல்வம் என்பவர் செய்திருக்கிறார். இந்தத் தகவல் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக லஞ்சக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், டாக்டர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் வாங்கியது உண்மையெனத் தெரியவந்தது.
உடனடியாக இன்ஸ்பெக்டர் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் ஆதாரங்கள் கிடைத்ததால், இன்ஸ்பெக்டர் மகிதா, பன்னீர்செல்வம் ஆகியோர்மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கூடுவாஞ்சேரி போலீஸார், பன்னீர்செல்வத்தைக் கைதுசெய்தனர். ஆனால் இன்ஸ்பெக்டர் மகிதாவைக் கைதுசெய்யவில்லை. அவர் தலைமறைவாகிவிட்டதாகவே போலீஸார் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் என்பதால் அவரைக் கைதுசெய்யவில்லை என்ற குற்றச்சாட்டு கூடுவாஞ்சேரி போலீஸார்மீது எழுந்தது.
இதையடுத்து துணை கமிஷனர் அதிரவீரபாண்டியன் மேற்பார்வையில் உதவி கமிஷனர் ஜெயராஜ் தலைமையிலான போலீஸார் இன்ஸ்பெக்டர் மகிதா, எங்கு தலைமறைவாக இருக்கிறார் என்பதை சில நாள்களாகக் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் மகிதா பதுங்கியிருந்த இடம் குறித்த தகவல் கிடைத்ததும் அவரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மகிதாவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு மகிதா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மாமூல் குற்றச்சாட்டில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மகிதா, கைதுசெய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.