காந்தி நகர்: காதல் திருமணங்களில் பெற்றோர் சம்மதத்தைக் கட்டாயமாக்க சட்டப்படி வாய்ப்பு இருக்குமானால், அது குறித்து தனது அரசு ஆய்வு செய்யும் என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.
படிதார் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான சர்தார் படேல் குழுமம் ஞாயிற்றுக்கிழமை மெஹ்சானாவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பூபேந்திர படேல், “திருமணத்துக்காக சிறுமிகள் ரகசியமாக வீட்டை விட்டு செல்லும் சம்பவங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் என்னிடம் கூறினார். மேலும், காதல் திருமணங்களுக்கு பெற்றோரின் சம்மதம் கட்டாயம் என்ற நிலையை உருவாக்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நமது அரசியலமைப்பு இதை ஆதரித்தால், நிச்சயமாக இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, சிறந்த முடிவைப் பெற முயற்சிப்போம்” என தெரிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் இம்ரான் கேதாவாலா வரவேற்பு தெரிவித்துள்ளார். அரசாங்கம் அத்தகைய சட்டத்தை சட்டசபையில் அறிமுகப்படுத்தினால், அதற்கு ஆதரவளிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.