
கிரிக்கெட் வீரர் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் : எல்ஜிஎம் படக்குழுவினர் பேட்டி
தோனி தயாரிப்பாளராக மாறி தயாரித்துள்ள முதல் தமிழ் படம் ‛எல்ஜிஎம்'. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கி, இசையமைத்தார். கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகிறது. ஹரிஷ், இவானா உள்ளிட்ட படக்குழுவினர் ஊர் ஊராக சென்று ரசிகர்களின் வரவேற்பை தியேட்டர்களுக்கு சென்று பார்த்து வருகின்றனர்.
அந்தவகையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் எல்ஜிஎம்(LGM)படக்குழுவின் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஹரிஷ் கல்யாண், ‛‛கோவைக்கு வருவது சந்தோஷம். எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் குடும்பங்கள் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டுகளித்து வருகின்றனர். நல்ல நல்ல கருத்துக்கள் வருகிறது. படத்திற்கு எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிறது. தோனி மகிழ்ச்சியாக உள்ளார். படம் பார்க்காதவர்கள் தியேட்டரில் போய் பாருங்கள்,'' என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகை இவானா, ‛‛நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம் படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது என்றனர்'' என தெரிவித்தார்.