ஹாங்காங்,
பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி, 30 வயதான இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். இவர் உயரமான கட்டிடங்களில் சுவர் வழியாக ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாக கொண்டவர். மேலும் அதனை புகைப்படங்கள் எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கடந்த வாரம், இவர் ஹாங்காங்கிற்கு டிரெகன்டர் டவர் எனும் மிக உயரமான கட்டிடத்தில் ஏறி படம் எடுக்க சென்றார்.
இதற்காக லிப்டில் ஏறி 68-வது மாடிக்கு சென்று அங்கு சில ஆபத்தான இடங்களில் புகைப்படம் எடுத்தார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதனை அங்குள்ள பணிப்பெண் பார்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அவரின் கேமரா மற்றும் பாஸ்போர்ட்டு கிடைத்தது. இதனை கொண்டு அவரது அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.