சென்னை கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகர், கண்ணன் தெருவைச் சேர்ந்தவர் அன்பு. இவர் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வருகிறார். இவரின் மனைவி வேளாங்கண்ணி. இவர்களுக்கு மரியன் லாசர் என்ற மகனும், 23 வயதில் மகளும் உள்ளனர். வேளாங்கண்ணிக்கு இடது காலில் குறைபாடு உள்ளதால் அவர் தாங்கி தாங்கித்தான் நடப்பார். இந்த நிலையில் கணவர், மகன், மகள் என மூன்று பேரும் வேலைக்குச் சென்று விட்டதால் வேளாங்கண்ணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வேலை முடிந்து மகன் மரியன் லாசர் வந்தார். அப்போது வீட்டின் வாசலில் லைட் எரியவில்லை. அதனால் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது படுக்கையறையில் வேளாங்கண்ணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து மரியன் லாசர் தன்னுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவுசெய்து விசாரித்தார்.

உயிரிழந்து கிடந்த வேளாங்கண்ணியின் சடலத்தைக் கைப்பற்றி போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வேளாங்கண்ணியின் பின்தலையில் பலத்த காயங்களும் கழுத்தில் ஸ்குரு டிரைவ்வால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன. வேளாங்கண்ணி வீட்டில் நகை, பணம் என எதுவும் கொள்ளைப் போகாததால் கொள்ளைக்காக இந்தக் கொலை நடக்கவில்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். அதனால் கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்தனர். இந்தக் கொலை சம்பவம் குறித்து விசாரிக்க துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் போலீஸார் கொலை நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது வேளாங்கண்ணியின் வீட்டுக்கு அவரின் சகோதரர் யுவராஜின் மகன் அகஸ்டின் அருண் மற்றும் அவரின் நண்பர் சாலமன் ஆகியோர் வந்து சென்ற தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அது குறித்து அகஸ்டின் அருணிடம் போலீஸார் விசாரித்த போது, `நான் அங்கு வரவே இல்லை’ என சத்தியம் செய்திருக்கிறார். உடனே போலீஸார் சி.சி.டி.வி கேமரா பதிவுகளைக் காண்பித்த பிறகே, `நான் ஆன்டி வீட்டுக்குச் சென்றேன். ஆனால் அவரை நான் கொலை செய்யவில்லை என் ஃப்ரெண்ட் சாலமன்தான் கொலை செய்தான்’ என்று கூறியிருக்கிறார். இதையடுத்து இருவரிடமும் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர், “ வேளாங்கண்ணி கொலை செய்யப்பட்டதும் அவரின் மகன் மரியன் லாசர், தன்னுடைய உறவினரான அகஸ்டின் அருணுக்கும் போனில் தகவல் தெரிவித்து உடனடியாக வீட்டுக்கு வரும்படி கூறியிருக்கிறார். அப்போது அகஸ்டின் அருண் எதுவுமே நடக்காதது போல அங்கு வந்திருக்கிறார். இந்தச் சமயத்தில்தான் கொலை சம்பவம் குறித்து நாங்கள் வேளாங்கண்ணி வீட்டின் கீழ் தளத்தில் உள்ள பர்னீச்சர் கடையில் வேலைப்பார்ப்பவர்களிடம் விசாரித்தோம். அப்போது அங்கு வேலைப்பார்க்கும் ஊழியர் ஒருவர், இந்த ப்ளு கலர் டீ சர்ட் அணிந்திருப்பவனை மதியம் வேளையில் வேளங்கண்ணி வீட்டில் பார்த்தேன் என்று கூறினான். ப்ளு கலர் டீ சர்ட் அணிந்திருந்த அகஸ்டின் அருணிடம் கேட்டபோது நான் ஆன்டி வீட்டுக்கு வரவில்லை என்று சத்தியம் செய்தார்.

ஆனால் சி.சி.டி.வியில் அகஸ்டின் அருணும் அவனின் நண்பனுமான சாலமனும் பைக்கில் வேளாங்கண்ணி வீட்டுக்கு வந்தது தெரியவந்தது. அதைக் காண்பித்ததும் நான் ஆன்டியைக் கொலை செய்யவில்லை சாலமன்தான் கொலை செய்தான் என்று கூறினான் அகஸ்டின் அருண். எதற்காக கொலை செய்தீர்கள் என்று கேட்டதற்கு நகை, பணத்தை திருட ஆன்டி வீட்டுக்குவந்தோம். நாங்கள் திருடும் போது ஆன்டி வேளாங்கண்ணி பார்த்து விட்டார். அதனால் சாலமன், ஸ்குரு டிரைவ்வால் குத்தி கொலை செய்து விட்டான் என்று மீண்டும் அகஸ்டின் அருண் தெரிவித்தான்.
இதையடுத்து சாலமனிடம் விசாரித்தபோது நான் கொலை செய்யவில்லை, நான் வீட்டின் கீழேதான் நின்றேன். அகஸ்டின் அருண்தான் மேலே சென்றான். மேலும் ஆன்டி வேளாங்கண்ணி மீது அகஸ்டின் அருணுக்கு ஆசை இருந்தது. அதனால்தான் காண்டம் வாங்கிக் கொண்டு நாங்கள் இருவரும் வேளாங்கண்ணி ஆன்டி வீட்டுக்கு வந்தோம். அப்போதுதான் ஆன்டி வேளாங்கண்ணியிடம் அகஸ்டின் அருண் தவறாக நடக்க முயன்றபோது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் நடந்த சம்பவத்தை வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிடுவேன் என்று வேளாங்கண்ணி கூறியதால் ஆத்திரத்தில் அவரை அகஸ்டின் கொலைசெய்து விட்டான்.

அதன்பிறகு எனக்கு அகஸ்டின் போன் செய்தான். அப்போதுதான் வோளங்கண்ணி ஆன்டி கொலை செய்யப்பட்டது எனக்குத் தெரியும் என உண்மையை போட்டு உடைத்தான் சாலமன். இதையடுத்து இருவரையும் கைதுசெய்து கொலைக்கு பயன்படுத்திய ஸ்குரு டிரைவ் மற்றும் அவர்கள் வாங்கி வந்த காண்டம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தோம். இருவரிடமும் விசாரித்தபோது இணையதளத்தில் ஆபாச வீடியோக்களைப் பார்த்ததாகவும் அதன்பிறகு ஆன்டி வேளாங்கண்ணியிடம் தவறாக நடக்கலாம் என்ற ஆசையில் அவரின் வீட்டுக்கு பைக்கில் வந்ததாகவும் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட அகஸ்டின் அருண், கல்லூரியில் படித்து வருகிறான். இருவரின் செல்போன்களிலும் ஆபாசமான வீடியோக்கள் இருந்தன. அவற்றையும் கைப்பற்றியிருக்கிறோம்” என்றனர்.