‘இனிமேல் தொழில்முனைவோர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு சிறை தண்டனை கிடையாது’ என்று கடந்த வியாழக்கிழமை மக்களவையில் ஒப்புதல்பெற்ற ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத்திருத்த மசோதா கூறுகிறது.
‘ஜன் விஸ்வாஸ்’ என்றாலே மக்களின் நம்பிக்கை அல்லது மக்களின் மேலுள்ள நம்பிக்கை என்று பொருள் ஆகும். இந்த சட்டத் திருத்தத்தில் 19 அமைச்சரவைக்கு கீழுள்ள, பல்வேறு தொழில் மற்றும் மக்கள் செயல்பாடுகள் குறித்த 42 சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய, நடைமுறையில் நடக்கக்கூடிய மற்றும் டெக்னிக்கல் தவறுகளுக்கு சிறை தண்டனை கிடையாது என்று மாற்றப்பட்டுள்ளது.

‘ஜன் விஸ்வாஸ்’ சட்டம் குறித்து பொருளாதார நிபுணர் சிவகுமார் கூறுகையில், “கடந்த வியாழக்கிழமை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் ‘ஜன் விஸ்வாஸ்’ என்ற சட்டத்திருத்ததை தாக்கல் செய்திருக்கிறார். இந்த சட்டத்திருத்தத்தை கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் சுலபமாக தொழில் தொடங்க அல்லது மேற்கொள்ள, கடந்த 10 ஆண்டுகளாக கிட்டதட்ட 40,000 பிரிவுகள் களையப்பட்டுள்ளது அல்லது எளிதாக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருக்கிறார்.
ஜன் விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், 19 அமைச்சரவை கீழ்வரும் 42 சட்டங்களில் சுமார் 180 மற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் படி, தொழில்முனைவோர்கள் கவனக்குறைவால் அல்லது தெரியாமல் செய்யும் சின்ன சின்ன தவறுகள் குற்றம் (decriminalise minor offence) ஆகாது.
பெரும்பாலும் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தெரியாமல் செய்யும் சின்னச் சின்ன தவறுகளுக்காக சிறை சென்று, தொழில் தொடங்குவதையே விட்டுவிடுகின்றனர். இது முளையிலேயே கிள்ளி எறிவது போன்றது ஆகும். இவர்கள் யாரும் கிரிமினல்கள் இல்லை. லட்சக்கணக்கில் கிடைக்கும் சம்பளத்தை விட்டுவிட்டு தொழில் தொடங்க வருகிறவர்கள் ஆவார்கள். ஆகவே, இந்த சட்டத்திருத்தம் இவர்களுக்கு பயத்தை நீக்கி உத்வேகத்தை தருவதாக அமையும்.

பொதுவாக ஒரு தொழில் தொடங்க குறைந்தபட்சம் 30 ஒப்புதல்கள் தேவைப்படும். இவை அனைத்தும் எளிதாக கிடைத்துவிடாது. இவர்கள் தெரியாமல் அல்லது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று விடும் ஒன்றிரண்டு ஒப்புதல்கள் இவர்களை பாதிக்கிறது. இந்தியாவில் ஒப்புதல் பெறுவது கஷ்டமில்லை, ஒற்றை சாளர ஒப்புதல் முறை இருக்கிறது என்று கூறுவதெல்லாம் சுத்தப்பொய். ஒரு தொழில்முனைவோர் அவரது தொழிலை பதிவு செய்ய ஒவ்வொரு துறையிலும் தனித்தனியாகத் தான் பதிவு செய்ய வேண்டும்.
இந்த சட்டத்தின் மூலம் இவை அனைத்தையும் எளிதாக்கியது வரவேற்கக்கூடிய விஷயமாகும். மருந்துகள் மற்றும் அழகு சாதனங்கள் சட்டம் (1940), பொது கடன் சட்டம் (1944), மருந்தியல் சட்டம் (1948)…போன்று இந்த சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சட்டங்களும் 20-30 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது. இது இந்த காலத்திற்கு ஏற்ப மாற்றுவது அவசியம். இந்த சட்டத்திருத்தம் அதை செய்துள்ளது. ஆனாலும் இதுவே தாமதம் ஆகும். அதனால் அரசு இதை சீக்கிரம் அமல்படுத்த வேண்டும்.

இந்த சட்டத்திருத்தத்தின் படி, தவறு செய்யும் தொழில்முனைவோர்கள் சிறைக்குச் செல்லாமல், அபராதம் மட்டும் கட்டிக்கொள்ளலாம். இதனால் ஒரு தொழிலும் மூடப்படாது. அந்தத் தவறும் திரும்ப செய்யப்படாது. மேலும் இப்படி நடக்கும் தவறுகளுக்கு தொழில்முனைவோர்களை குற்றம் சொல்லி பயனில்லை. இவர்களுக்கு கற்று கொடுக்க மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும்” என்று கூறுகிறார்.