தமிழகத்துக்கு யூடர்ன் அடித்த கோடைக்காலம்.. பொசுக்கி எடுக்கப் போகுதாமே.. முக்கிய வானிலை அப்டேட்

சென்னை:
கோடைக்காலம் முடிந்து இப்போது தான் தமிழக மக்கள் பெரு மூச்சு விட்ட நிலையில், மீண்டும் கோடை வெயில் யூடர்ன் அடித்து தமிழ்நாட்டுக்கு நுழைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் வெயிலும், அனல் காற்றும் பொசுக்கி எடுக்கும் அளவுக்கு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாததை போல இந்த ஆண்டு கோடைக்காலம் நெருப்பாக சுட்டெரித்தது. எப்போதும் மார்ச் மாதம் தொடங்கும் கோடை, நடப்பாண்டில் பிப்ரவரியிலேயே தொடங்கி தனது கோரத் தாண்டவத்தை காட்டியது.

தமிழகத்தில் சர்வ சாதாரணமாக ஏப்ரல் மே மாதங்களில் 105 முதல் 110 டிகிரி வரை வெப்பநிலை பதிவாகி மண்டையை பிளக்கச் செய்தது. அதிலும் நம் நேரத்திற்கு அந்த நேரத்தில் கடல் காற்றும் குறைந்ததால் வெயில் கொடுமை பல மடங்காக அதிகரித்தது.

தீவிரமான பருவமழை:
எப்போது கோடைக்காலம் முடியும் என புலம்பாதவர்களே இல்லை எனக் கூறும் அளவுக்கு வெயில் நம்மை வைத்து செய்தது. இதனிடையே, கடந்த மாதம் ஜூன் முதலாக கொஞ்சம் கொஞ்சமாக கோடை வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியது. பின்னர் தென்மேற்கு பருவமழையும் கேரளாவில் தீவிரமானதால் தமிழகத்திலும் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. சென்னை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, ஈரோடு, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் குற்றால சீசன் போல விட்டு விட்டு மழை பெய்து வானிலையே ரம்மியாக மாறியது.

யூடர்ன் அடித்த கோடை:
அப்பாடா ஒரு வழியாக கோடை முடிந்துவிட்டது என மக்கள் சந்தோஷப்பட்ட தருணத்தில் தான் வானிலை ஆய்வு முக்கிய அப்டேட்டுடன் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என்ற செய்திதான் அது. ஏற்கனவே கடந்த இரண்டு வாரமாக தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், கோடைக்கு நிகராக வெயில் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4 டிகிரி வரை வெப்பம் உயரும்:
வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் தமிழ்நாட்டில் இன்றும், நாளையும இயல்பில் இருந்து 4 டிகிரி வரை வெப்பம் உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். சென்னையில் இரண்டு நாட்களுக்கு 38 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் பகல் நேரங்களில் முதியவர்கள், நோயாளிகள் வெளியில் நடமாடுவதை தவிர்க்கலாம் என மருத்துவர்களும் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.