சென்னை: “நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை, கொளத்தூர், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கல்லூரியில் பயிலும் 685 மாணவ,ப் மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் ரூ. 10,000 மற்றும் கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகளை வழங்கிடும் அடையாளமாக 20 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “எத்தனையோ போராட்டத்துக்கு பிறகு நமக்கு இந்தப் படிப்பு கிடைத்திருக்கிறது. இந்தக் கல்விதான் நாம் மட்டுமில்லை, நம்முடைய தலைமுறையே முன்னேறுவதற்கான இது அச்சாரமாக அமைந்திருக்கிறது. அதனால்தான், நீங்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும், குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.
பசியில் வாடாமல் இருப்பதற்குதான், காலையில் பள்ளிக்கு வந்தவுடன், காலை உணவுத் திட்டம். மாணவிகள், பள்ளி, கல்லூரி, வேலைகளுக்குப் செல்ல, நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம். உங்களில் பல பேர் இந்தப் பயணத்தால், மாதம் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தி, அதை கல்விச் செலவுகளுக்குப் பயன்படுத்தி இருப்பீர்கள் என்று நான் மனதார நம்புகிறேன்.
படிக்கும்போது பாடத்திட்டத்தை தாண்டி, உங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டுமென்பதற்காகதான் ‘நான் முதல்வன்’ என்கிற ஒரு அற்புதமான திட்டம். அரசுப் பள்ளியில் படித்துவிட்டு கல்லூரிகளில் சேருகின்ற மாணவிகளுக்கு, ‘புதுமைப்பெண்’ என்ற திட்டத்தின் மூலம், மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இன்றைக்கு இரண்டு நாட்களாக நீங்கள் பத்திரிகைகளிலும் பார்த்திருப்பீர்கள், தொலைக்காட்சியிலும் பார்த்திருப்பீர்கள். படிப்பதற்காகவும், வேலை பார்ப்பதற்காகவும், வெளியூர் செல்ல வேண்டும் என்றால், பெண்கள் பாதுகாப்பாக தங்கி கொள்ள வசதியாக இப்போது ‘தோழி விடுதிகள்’ என்று விடுதி ஆரம்பித்திருக்கிறோம். குடும்பத் தலைவிகளாக இருக்கின்ற உங்கள் அம்மா மற்றும் சகோதரிகளுக்கு வருகிற செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்தநாளிலிருந்து மாதந்தோறும் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை அதையும் வழங்கப் போகிறோம்.
இப்படி ஒவ்வொரு கட்டமாக பார்த்து, பார்த்து திட்டங்கள் தீட்டி உதவி செய்து கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பயன்படுத்திகொண்டு நீங்கள் எல்லோரும் நன்றாக படிக்க வேண்டும். இன்னும் சில ஆண்டுகள் கடந்து, எங்கேயாவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு சூழ்நிலையில், ஏதாவது ஒரு தருணத்தில் என்னை நீங்கள் சந்திக்கும்போது, “உயரமான பதவிகளில் இருக்கிறோம். இவ்வளவு பெரிய ஆளாகிவிட்டோம்” என்று பெருமையோடு சொல்லும் அளவுக்கு அந்த சூழ்நிலை ஏற்பட்டால் அதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் எனக்கு இருக்க முடியாது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இதைத்தான் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கண்ட கனவுகள். அவர்கள் கண்ட கனவு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றுகிறான் என்பதில் எனக்கு பெருமை. இதைவிட பெருமை எனக்கு வந்து சேரமுடியாது.
நீங்கள் பெருமை அடைவது ஒரு பக்கம் இருந்தாலும், எனக்கு அதைவிட முக்கியம் எது என்று கேட்டால், நீங்கள் படித்து உங்கள் பெற்றோரை பெருமை அடைய வைக்கவேண்டும். இந்த தாய்த் தமிழ்நாட்டை பெருமை அடைய வைப்பதற்கு கல்விதான், கல்வியை யாராலும் திருடவே முடியாது. அதுதான் நிலையான சொத்து. நீங்கள் எல்லோரும் நன்றாக படியுங்கள் என்ற வேண்டுகோளை மட்டும் இந்த நேரத்தில் வைத்து, சாதிக்க முடியாத சாதனைகளை எல்லாம் நீங்கள் சாதித்து காட்டவேண்டும் என்ற அந்த வேண்டுகோளையும் வைக்கிறேன்” என்று அவர் பேசினார்.