புதுடெல்லி: எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் சென்று அங்கு மக்கள் கூறியதை கேட்டு வந்துள்ள நிலையில், அது குறித்து அவர்கள் கூற, நாங்கள் கேட்க விரும்புகிறோம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “மணிப்பூர் இன வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டது. ஆனால், எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்த அனுமதிக்கவில்லை. எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூருக்குச் சென்று, அங்குள்ள மக்களிடம் பேசிவிட்டு திரும்பி வந்துள்ளனர். மணிப்பூரில் உள்ள மக்களிடம் அவர்கள் கேட்டதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். நாடாளுமன்றத்தில் அதுபற்றி அவர்கள் பேசுவதை யார் தடுக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏன் விவாதிக்க மறுக்கிறார்கள். அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது தெளிவாகிவிட்டது. மணிப்பூர் குறித்த அவர்களின் கவலை உண்மையாக இருந்திருந்தால், அவர்கள் நாடாளுமன்ற விவாதத்தை அனுமதித்திருப்பார்கள். எதிர்க்கட்சிகளின் பாசாங்குத்தனத்தை இந்த நிகழ்வு அம்பலப்படுத்துகிறது. மணிப்பூர், மணிப்பூர் என்று கூறி, அவர்கள் நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை முற்றிலுமாக சீர்குலைத்துள்ளனர். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதற்காக மட்டுமே அவர்கள் மணிப்பூர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். எதிர்க்கட்சிகளின் மனநிலை அவர்கள் அணிந்திருந்த ஆடைகளைப் போலவே கருப்பு.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, மணிப்பூரில் சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடந்தபோது ஒரு வருடத்திற்கு எந்த உள்துறை அமைச்சரும் அங்கு செல்லவில்லை. ஆனால், தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூரில் மூன்று நாட்கள் இருந்தார். நிவாரண முகாம்களில் இருந்து முகாம்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மணிப்பூருக்குச் சென்ற உள்துறை அமைச்சர் யார்? ஒருவேளை மத்திய இணை அமைச்சர் ஒருவர் சென்றிருக்கலாம்” என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முன்னதாக, மணிப்பூர் கலவரம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் பிரதமர் அதுகுறித்து கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவதாக, மணிப்பூருக்கு நேரில் சென்று வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டினர். | அதன் விவரம்: மணிப்பூர் ஆளுநருடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு: பிரதமர் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு