மணிப்பூர் விவகாரம்… ஓகே சொன்ன மத்திய அரசு… நாடாளுமன்றத்தில் இன்று சரியா 2 மணிக்கு!

நாடாளுமன்றம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தி, மக்கள் நலத்திட்டங்கள் பலவற்றை அமல்படுத்தி குறை நிறைகளை சரிசெய்ய முக்கியமான இடமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு கூச்சல், குழப்பம், அமளி, ஒத்திவைப்பு என மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல்கள் தான் அரங்கேறி வருகின்றன. கடந்த கூட்டத்தொடர் முழுவதுமாக வீணானது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் ஒரு வாரமாக அமளி துமளியாக கடந்து போனது.

மத்திய அரசு திட்டம்

அதேசமயம் தாங்கள் திட்டமிட்டபடி மசோதாக்களை நிறைவேற்றி மத்திய அரசு கச்சிதமாக காய் நகர்த்தி வருகிறது. சரி இன்றைய நிலவரத்திற்கு வருவோம். இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர், புத்துணர்ச்சியுடன் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வந்தனர். முன்னதாக மணிப்பூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்த இந்தியா கூட்டணி எம்.பிக்கள் கூடி இன்று காலை ஆலோசனை நடத்தினர்.

இரு அவைகளிலும் அமளி

இவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து முக்கியமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க முடிவு செய்தனர். அதாவது, மணிப்பூரில் கள நிலவரம் குறித்து இரு அவைகளிலும் பேச அனுமதிக்க வேண்டும் என்பது தான். இதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் மாநிலங்களவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கூறி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு விவாதம்

இதில் எம்.பிக்கள் ராகவ் சதா, மனோஜ் ஜா, அமரேந்திர தரி சிங், பிரமோத் திவாரி, இமாம் பிரதாப்கார்ஹி, சந்தீப் பதக், ராஜிவ் சுக்லா, கே கேசவ ராவ், வத்திராஜு ரவி சந்திரா ஜோகினஹள்ளி சந்தோஷ் குமார், ரஞ்சீத் குமார் ஆகியோர் அடங்குவர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மாநிலங்களவை தலைவர் பியூஸ் கோயல், மணிப்பூர் விவகாரம் குறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு விவாதிக்க தயாராக இருக்கிறோம்.

ஆனால் ஒரு சிக்கல்

ஆனால் அவை உறுப்பினர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே 9 முக்கியமான நாட்களை எதிர்க்கட்சியினர் வீணடித்துள்ளனர். அதை மறந்து விட வேண்டாம் என்று குறிப்பிட்டார். அதேசமயம் இது குறுகிய கால விவாதமாக இருக்கும் என்பதால் எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விதி எண் 267ன் கீழ் விரிவான விவாதத்திற்கு அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வாரம் முக்கியமான மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மசோதாக்கள் நிறைவேற்றம்

டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணை ஆளுநருக்கே கிடைக்க வழி செய்யும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற தீவிரம் காட்டி வருகிறது. இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் திட்டமிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.