டல்லாஸ்,
6 அணிகள் இடையிலான முதலாவது மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) 20 ஓவர் போட்டி அமெரிக்காவில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை அரங்கேறிய இறுதிப்போட்டியில் வெய்ன் பார்னெல் தலைமையிலான சீட்டில் ஆர்கஸ் அணி, நிகோலஸ் பூரன் தலைமையிலான எம்.ஐ.நியூயார்க் அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த நியூயார்க் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த சீட்டில் ஆர்கஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 87 ரன்கள் (52 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். நியூயார்க் அணி தரப்பில் டிரென்ட் பவுல்ட், ரஷித் கான் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய நியூயார்க் அணியில் தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர் ரன் ஏதுமின்றியும், ஷயான் ஜகாங்கீர் 10 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 3-வது வரிசையில் களம் புகுந்த கேப்டன் நிகோலஸ் பூரன் ருத்ரதாண்டவமாடினார். சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்த அவர் 40 பந்துகளில் சதம் அடித்து அசத்தியதுடன் அணியை வெற்றிப்பாதைக்கும் அழைத்துச் சென்றார்.
நியூயார்க் அணி 16 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நிகோலஸ் பூரன் 137 ரன்னுடனும் (55 பந்து, 10 பவுண்டரி, 13 சிக்சர்), டிம் டேவிட் 10 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த தொடரில் நிகோலஸ் பூரன் (388 ரன்கள்) அதிக ரன் குவித்தும், டிரென்ட் பவுல்ட் (22 விக்கெட்) அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியும் கலக்கினர். நிகோலஸ் பூரன், இந்த தொடரில் ஆடுவதற்காக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான வெஸ்ட்இண்டீஸ் அணி தேர்வில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
எம்.ஐ. நியூயார்க் அணி, மும்பை இந்தியன்சுக்கு சொந்தமானது. இதையும் சேர்த்து 20 ஓவர் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துக்கு கிடைத்த 9-வது மகுடமாக இது அமைந்தது. ஏற்கனவே அந்த அணி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 5 முறையும், சாம்பியன்ஸ் லீக்கில் 2 தடவையும், பெண்கள் பிரிமீயர் லீக்கில் ஒரு முறையும் கோப்பையை வென்று இருக்கிறது.