கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடந்த பட்டாசுக் கிடங்கு வெடி விபத்துக்கு சிலிண்டர் காரணம் இல்லை எனவும், வீண்பழி போடவேண்டாம் எனவும் ஓட்டல் உரிமையாளரின் குடும்பத்தினர், விசாரணை அலுவலர்களிடம் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி பழையப்பேட்டை நேதாஜி சாலையில் கடந்த 29-ம் தேதி காலை பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இந்த வெடி விபத்து ஓட்டலில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தால்தான் ஏற்பட்டது என தடயவியல் நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், உணவுத் துறை அமைச்சருமான சக்கரபாணி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தப் பட்டாசு வெடி விபத்து தொடர்பாக விசாரணை நடத்திட, சிறப்பு கூடுதல் மாவட்ட நிர்வாக நீதிபதி பவணந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று அவர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். அப்போது பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் ராஜேஸ்வரின் குடும்பத்தினர், விசாரணை அலுவலர்களிடம் கூறியது: “எனது தாயார் ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிரேயும், நேதாஜி சாலையிலும் ஓட்டல்கள் நடத்தி வந்தார். விபத்துக்குள்ளான ஓட்டல் கடையில் சமையல் செய்வது கிடையாது. உணவுகள், வேறு இடத்தில் தயாரித்து,. இங்கே கொண்டு வரப்படும். விபத்து நடந்த ஓட்டலில் தோசை, ஆம்லேட் உள்ளிட்டவை சுடுவதற்காக மட்டுமே சிலிணடர் அடுப்பு பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், வெடி விபத்துக்கு சிலிண்டர்தான் காரணம் என கூறுவது மிகுந்த வேதனையளிக்கிறது. வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து எனது தாய் சடலமாக மீட்கப்பட்ட போது அவரது உடலில் தீ காயங்கள் இல்லை. கடையின் மேற்கூரை, சுவர் இடிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும், மீட்பு பணியின்போது சிலிண்டர் முழுமையாக இடிபாடுகளில் இருந்து எடுத்துள்ளனர். கடையில் இருந்த திண்பண்டங்கள், பொருட்கள் அனைத்து சேதமாகி உள்ளதே தவிர, தீ பரவியதற்கான பாதிப்புகள் எதுவும் இல்லை. அப்படியிருக்க, வெடி விபத்திற்கு சிலிண்டர்தான் காரணம் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏற்கெனவே தாயை இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்தின் மீது வீண் பழிபோடதீர்கள். சிலிண்டர் வெடித்திருந்தால் எனது தாய் உடல் சிதறிருக்க வேண்டும். எனவே, வெடி விபத்துக்கான உண்மையான காரணத்தை தெரிவிக்க வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க விசாரணை அலுவலர், அவர்களிடம் தெரிவித்தார்.