மேவாட்: ஹரியாணாவில் மத ஊர்வலத்தில் திடீரென ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்த நிலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2500 பேர் கோயில் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர்.
ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பும் மோதிக் கொள்ள கலவரம் மூண்டது. உடனடியாக போலீஸுக்கு தகவல் கிடைக்க போலீஸார் அங்கு குவிந்தனர். கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தினர். பின்னர் கலவரக்காரர்களை நோக்கியும் போலீஸார் சுட்டனர். போலீஸ் தடியடியில்20 பேர் காயமடைந்தனர். , துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட்டுள்ளார். அரசாங்கம், தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவை முடக்கப்பட்டது. மத ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2500 பேர் நுலார் மாதவ் கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை பத்திரமாக அப்புறப்படுத்த இயலாமல் போலீஸார் திணறி வருகின்றனர்.
கலவரத்துக்குக் காரணம் என்ன? பஜ்ரங் தள ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ காரணமாக இந்தக் கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது. பஜ்ரங் தள உறுப்பினரான மோனு மனேசர் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த சர்ச்சை வீடியோவை சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் இந்த மோனு மனேசர். இவர் யாத்திரையின் போது தானும் மேவாட் பகுதிக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.