புதுடெல்லி: மணிப்பூரைப் போல் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளது எனக் கூறுவது ஏற்புடைய வாதமா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்திடம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் தொடங்கிய இனக்கலவரத்தின்போது பழங்குடியினப் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் அடையாளம் வெளியிடப்படக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை விசாரணை செய்தார்.
சரமாரிக் கேள்விகளை முன்வைத்து உச்ச நீதிமன்றம்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை நாட்டின் எல்லா பகுதிகளில் நடைபெறுகிறது என்று கூறுவது ஏற்புடைய வாதம் அல்ல. இதற்கு ஒரே பதில்தான் எங்களிடம் உள்ளது. நாட்டின் ஒரு பகுதியில் நடக்கும் தவற்றை அதே குற்றம் மற்ற பகுதிகளிலும் நடைபெறுகிறது என்பதற்காக மன்னித்துவிட முடியாது.
இப்போதைய கேள்வி மணிப்பூர் பிரச்சினையை எப்படிக் கையாளலாம் என்பதே. இதற்கு உங்கள் பதில் என்ன எல்லா மகள்களையும் பாதுகாப்போம் எனக் கூறுகிறீர்களா? இல்லை எந்த மகளையும் காப்பாற்ற வேண்டாம் எனக் கூறுகிறீர்களா? மணிப்பூரில் நடந்ததுபோல் பிற மாநிலங்களிலும் நடைபெறுகிறது எனக் கூறி அநீதியை நியாயப்படுத்த முடியாது.
24 மணி நேரத்தில் பதில் சொல்லுங்கள்: மணிப்பூர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு 24 மணி நேரத்தில் பதில் சொல்ல வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.
“நாம் இதுவரை கண்டிராத வன்முறையைக் கண்டுள்ளோம். இனவாத, வகுப்புவாத சூழலில் இந்த வன்முறையை நாம் சந்தித்துள்ளோம். பாதிக்கப்பட்ட இந்த இரண்டு பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் எந்த அளவுக்கு விருப்புகிறதோ அதே அளவுக்கு இதுபோல பாதிக்கப்படும் பிற பெண்களுக்கும் நீதி கிடைக்கும் வகையில் ஒரு வழிமுறையை (mechanism) உருவாக்க வேண்டும். குற்றம் தொடர்பாக வழக்கு போடுதல், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தலை உறுதி செய்யும் ஒரு செயல்முறையை உருவாக்க வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
6 கேள்விகள்: மத்திய அரசும், மணிப்பூர் மாநில அரசும் நாளை வரும்போது 6 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
1. மணிப்பூரில் எத்தனை வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன?
2. எத்தனை ஜீரோ எஃப்ஐஆர்கள் பதிவாகியுள்ளன? (ஜீரோ எஃப்ஐஆர் என்பது காவல் சரகங்களைக் கடந்து பதிவாகப்படும் முதல் தகவல் அறிக்கைகள்)
3. எத்தனை எஃப்ஐஆர்கள் பின்னர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டன?
4. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
5. கைது செய்யப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கான சட்ட உதவிக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?
6. 164 சட்டப்பிரிவின் கீழ் எத்தனை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகிய 6 கேள்விகளை உச்ச நீதிமன்றம் முன்வைத்துள்ளது.