புதுடில்லி: மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கான நீதியை நாங்கள் வழங்குவோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் கூட்டு வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள், வெளிப்படையான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்க உத்தரவிடக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 31) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தனி ஒரு சம்பவமாக நாங்கள் பார்க்கவில்லை. பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கான நீதியை நாங்கள் வழங்குவோம். இத்தகைய கொடுமைகளுக்கு ஆளான பல பெண்கள் புகார் அளிக்காமல் இருக்கின்றனர். புகார் அளிக்கவில்லை என்றாலும் அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பாக எத்தனை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன? இந்த பிரச்னைகளை பரந்த கண்ணொட்டத்தில் அணுக வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement