இனி குறையுமா தக்காளி விலை? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விற்பனை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் தக்காளியை தவிர்த்து சமைக்கப்படும் உணவுகளை சமைக்கவே இல்லத்தரிசிகள் முன்னுரிமை கொடுத்து வருகின்றனர். தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தக்காளி விலையில் ஏற்றமும் இறக்கமும் நிலவி வருகிறது. தற்போது ஒரு கிலோ தக்காளி 200 ரூபாயை தாண்டியுள்ளது.

அண்டை மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் பருவமழையால் உற்பத்தி குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.தமிழகத்தில் தக்காளி விலை உயர தொடங்கியதுமே 302 ரேஷன் கடைகளில் கிலோ 60 ரூபாய் என தக்காளி விற்பனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று தக்காளி விலையேற்றம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது இன்று முதல் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி சென்னையில் 100 ரேஷன் கடைகளிலும், கோவை, மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 20 கடைகள், செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 15 கடைகள், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் 10 கடைகள், அரியலூர், கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் 5 கடைகள் என தமிழகம் முழுவதும் 500 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்த ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை கிலோ 60 ரூபாய் என விற்பனை செய்யப்படும். தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் அதனை வைத்து ஆளுங் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இருப்பினும் இன்னும் கூடுதலான கடைகளில் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.