என்னுடன் டேட்டிங் செய்ய நடிகர் ஒருவர் கெஞ்சினார் : கங்கனா
தலைவி படத்தை அடுத்து சந்திரமுகி-2 படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், ஹிந்தியில் முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். சினிமா மற்றும் அரசியல் புள்ளிகள் குறித்த கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் கங்கனா, தற்போது சோசியல் மீடியாவில் ஒரு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், சில பாலிவுட் பிரபலங்கள் போலி ஐடியை வைத்து தன்னுடன் சாட்டிங் செய்து வருவதாக புகார் தெரிவித்து இருக்கிறார். திரைப்பட மாபியாக்கள் எப்போதுமே தங்களது இயல்பான வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே டேட்டிங் செய்த ஒரு பிரபல பாலிவுட் நடிகர் என்னுடன் பேச வெவ்வேறு எண்கள் மற்றும் கணக்குகளைப் பயன்படுத்துவார். ஒருமுறை அவர் என்னுடைய சமூக வலைதளத்தை ஹேக் செய்து முடக்கியதோடு என்னை மிரட்டினார். அவர் விவாகரத்து செய்யப்போகிறார் என்று நினைத்தேன். பின்னர் அது இல்லை என கண்டுபிடித்தேன். எனது ஒப்பந்தங்கள் கைப்பற்றப்படுவதையும், தனிப்பட்ட வாழ்க்கை சுரண்டப்படுவதையும் கவனித்து வருகிறேன். அவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல, அவர்களுக்கு குற்றப் பின்னணியும் உள்ளது. எனக்கு பயமாக இருக்கிறது. மும்பை போலீசார் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள்.
அதேப்போல் பெண் ரசிகைகளை அதிகமாக கொண்ட இன்னொரு பாலிவுட் நடிகர் என் வீட்டிற்கு வந்து டேட்டிங் செய்யுமாறு என்னிடத்தில் கெஞ்சினார். பல இடங்களில் அவர் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து வந்தார். ஆனால் அவரை நான் புறக்கணித்து விட்டேன் என்று கூறியுள்ள கங்கனா, அதர்மத்தை அழிப்பது தர்மத்தின் முக்கிய நோக்கம் என்பதால் அவர்களை அழிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதை மேற்கோள் காட்டி உள்ளார் .