என்னை 'ஆடு' என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்.. ஆட்டுக்கும் எனக்கும் தொடர்பு அதிகம்.. அண்ணாமலை ஓபன் டாக்

சென்னை:
தன்னை பார்த்து ‘ஆடு’ என விமர்சிப்பவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாணியில் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ஆட்டுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் நெகிழ்ச்சியாக பேசினார்.

தனியார் யூடியூப் சேனல் சார்பிலான நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவரை சிலர் ‘ஆடு’ என விமர்சிப்பது பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

எங்க அப்பா அம்மா ஆடு வளர்த்துதான் என்னை படிக்க வெச்சாங்க. என் வாழ்க்கையில் எனக்கும் ஆட்டுக்கும் பெரிய தொடர்பே இருக்கு. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. ஆட்டுக்குட்டியை எங்க அப்பா விற்ற பிறகுதான் எங்க குடும்பத்திற்கு பணமே வரும். அந்தக் குட்டியை விற்று வரக்கூடிய பணத்தில் தான் எங்களுக்கான செலவுகளை அவர்களால் செய்ய முடியும். எங்களுக்கான வருமானமே ஆடுகளிடம் இருந்துதான் வந்துச்சு. எனவே ஆடு இல்லைனா இந்த அண்ணாமலை இல்லை. ஆட்டின் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இப்போதும் உண்டு. ஆட்டை பார்த்தாலே எனக்கு கையெடுத்து கும்பிடதான் தோன்றும்.

என்னை பார்த்து ஆடு என்று யாராவது சொன்னால், அதை எனது அடையாளமாகவே நான் கருதுகிறேன். அது எனது அங்கீகாரம். நான் சொல்வது கிராம மக்களுக்குதான் புரியும். நகரங்களில் இருப்பவர்களுக்கு புரியாது. நமது குடும்பத்துடன் ஆடு எவ்வளவு பிணைப்பாக இருக்கும் என்பது கிராமங்களுக்கு வந்தால் தான் தெரிந்துகொள்ள முடியும். என்னை பார்த்து ஆடு, ஆடு என்று சொல்ல சொல்ல தான் எனது வளர்ச்சியும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. என்னை ஆடு என கூப்பிடுவதால் எனக்கு சந்தோஷம் தான்.

அதுமட்டுமல்லாமல், பொதுவாழ்க்கைக்கு ஒருத்தர் வந்துவிட்டால் அவர் கண்டிப்பாக விமர்சிக்கப்பட வேண்டியவர் என்பதே என் கருத்து. அந்த விமர்சனம் உண்மையாக இருக்கலாம்; முழு பொய்யாக இருக்கலாம்; பாதி பொய்யாக இருக்கலாம். அதை எப்படி கடக்கிறோம் என்பது அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

அதனால் என்னை பற்றி மீம் போடுகிறவர்களை பார்த்து நான் என்றைக்கும் கோபப்பட மாட்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக, நாம் பேசுபொருளாக மாறிவிட்டாலே வெற்றி பெற்றதாகவே அர்த்தம். வெற்றியின் முதல் இலக்கணமே நீங்கள் பேசுபொருள் ஆக வேண்டும் என்பதுதான். நல்ல விஷயமோ கெட்ட விஷயமோ மக்கள் உங்களை பற்றி பேசணும். யாரும் உங்களை பற்றி பேசவே கூடாது என்று சொன்னால் நீங்கள் பொதுவாழ்க்கைக்கே வரக்கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.