நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை கடந்த 28 ஆம் தேதி முதல் என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் மக்களின் குறைகளை கேட்டறியும் அண்ணாமலை, மத்திய அரசின் 9 ஆண்டு ஆட்சியில் செய்த சாதனைகளையும் மக்களிடம் எடுத்துக் கூறி வருகிறார்.
செல்லும் இடங்களில் எல்லாம் அண்ணாமலைக்கு நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. மக்களை சந்திக்கும் இடங்களில் திமுகவையும் வச்சு செய்து வருகிறார் அண்ணாமலை. பாத யாத்திரையின் 5 ஆம் நாளான இன்று சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மக்களை சந்தித்து வருகிறார் அண்ணாமலை.
அப்போது மண்பாண்ட கூட்டுறவு சொசைட்டியில் தொழிலாளர்களை சந்தித்த அண்ணாமலை அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து மண் பானை செய்த அண்ணாமலை கடம் இசைக்கருவியையும் வாசித்து மகிழ்ந்தார். தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றார்.
மத்தியில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவையும் சாடிய அண்ணாமலை, அரசியல் நிகழ்ச்சியில் உதயநிதியின் மகன் பங்கேற்கிறார் என்பதை சுட்டிக்காட்டினார். மேலும் திமுகவினர் யாத்திரை நடத்தினால் ‘என் மகன் என் பேரன்’ என்று தான் பெயர் வைத்திருப்பார்கள் என்றும் நக்கலடித்தார்.
இந்த பாத யாத்திரையில் அண்ணாமலையுடன் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் பங்கேற்று வருகின்றனர். அண்ணாமலையின் இந்த பாத யாத்திரை மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறுகிறது. தற்போது நடைபெறும் முதற்கட்ட பாத யாத்திரை தென் மாவட்டங்களில் வரும் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த பாத யாத்திரை பயணத்தின் போது தமிழகம் முழுவதும் 10 இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் உட்பட மத்திய அமைச்சர்கள் 10 பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாத யாத்திரையின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.