பெய்ஜிங்:
சீனாவை வரலாறு காணாத அளவுக்கு மழை அடித்து நொறுக்கி இருக்கிறது. கொஞ்சம் இடி மின்னலுடன் 3 மணிநேரம் சேர்ந்த மாதிரி மழை பெய்தாலே பேய் மழை எனக் கூறும் நமக்கு, உண்மையிலேயே பேய் மழை என்றால் என்ன என்று சீனாவில் பெய்த மழை காட்டியுள்ளது.
சீனாவை மூன்று தினங்களுக்கு முன்பு டோச்சுரி என்ற பயங்கர சூறாவளி பதம் பார்த்தது. சீன தலைநகர் பெய்ஜிங், டியோன்ஜின், ஹெபேய், ஷான்ஷி உள்ளிட்ட வடக்கு மாகாணங்களை அந்த சூறாவளி கோரத்தாண்டவம் ஆடியது. இந்த சூறாவளியால் ஆயிரக்கணக்கான வீடுகள், அலுவலகங்கள் சேதம் அடைந்தன. சில சிறிய வீடுகள் இடிந்து விழுந்தன. பல வாகனங்கள் தூக்கி வீசி நொறுக்கப்பட்டன.
ஒருவழியாக சனிக்கிழமை மாலை இந்த சூறாவளி ஓய்ந்து மக்களும் அப்பாடா என பெருமூச்சு விடுவதற்குள்ளாக, அந்த மாகாணங்களில் மழை பெய்ய தொடங்கியது. மேகங்கள் உடைந்து அருவி போல கொட்டினால் எப்படி இருக்குமோ அதுபோன்ற பயங்கர மழை பெய்தது. விடிய விடிய சுமார் இரண்டு நாட்களுக்கு இந்த பேய் மழை தொடர்ந்ததால் பெய்ஜிங் உட்பட மேற்குறிப்பிட்ட மாகாணங்களே வெள்ளத்தில் மூழ்கின.
தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு பல மாவட்டங்கள் மூழ்கி பல மாவட்டங்களும் கிராமங்களும் மழை நீரில் மூழ்கின. சனிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை மதியம் வரை சுமார் 580 மிமீ மழை பெய்துள்ளது. இந்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். 19 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வீடுகள் இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சீனாவில் இதுபோன்ற பயங்கர மழை இதுவரை பெய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.