கோவை: 40 கிமீ–க்கு மேல் போனால் அபராதம்! வந்துடுச்சு ரேடார் கேமரா! மக்கள் என்ன சொல்றாங்கன்னா?

சென்னைக்குப் பிறகு கோவையிலும் தானியங்கி ரேடார் கேமராக்களைப் பொருத்தி, வீதிமீறலில் ஈடுபடுபவர்களிடம் அபராத வேட்டையைத் தொடங்கி விட்டனர் கோவை காவல்துறையினர். ஆம், 40 கிமீ வேகத்துக்கு மேல் செல்லும் வாகனங்களைக் கண்காணித்து அபராதம் விதிப்பதற்காக, சாலையில் தானியங்கி ஸ்பீடு ரேடார் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கேமராக்கள் பொருத்தப்பட்டு விட்டன.

முதற்கட்டமாக, கோவையின் முக்கியச் சாலைகளான கோவை – அவிநாசி சாலையில் ஜிடி அருங்காட்சியகம் அருகில், கோவை – சத்தி சாலையில் அம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் மற்றும் கோவை – பாலக்காடு சாலையில் விஜயலட்சுமி பேருந்து நிறுத்தம் அருகில் என 3 சாலைகளில் ரேடார் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

ஸ்பீடு ரேடார் கேமரா

இது தொடர்பாகப் பேசிய அவர், ‘‘கோவை மாநகரப் பகுதியில் 40 கிமீ வேகத்தில் வாகனங்கள் இயக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பீடு 3டி ரேடார் என்பதால், சாலையில் செல்லும் ஒவ்வொரு வாகனங்களின் வேகத்தையும் இந்த ரேடார் பதிவு செய்துகொள்ளும். அதேநேரத்தில் ANPR (Automatic Number Plate Recognition) கேமரா மூலம் புகைப்படம் எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 32 வாகனங்களை இந்த ஸ்பீடு ரேடார் கேமரா கண்காணிக்கும். 

வாகனங்கள் 40 கிமீ மேல் வேகத்தில் செல்லும் பட்சத்தில், உடனே ரேடார் மூலம் வேகமாகச் சென்ற வாகனத்தைப் புகைப்படம் எடுத்து, வண்டி எண் பதிவு செய்யப்பட்டு தனி சர்வேயில் பதிவாகிவிடும். ரேடார் சர்வே மற்றும் என்ஐசி சர்வே ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு உள்ளதால், கட்டுப்பாட்டு அறைக்கு வாகனங்களின் விவரங்கள் சென்றுவிடும். கட்டுப்பாட்டு அறையிலிருந்து வாகனத்தின் ஆர்சி புக்கில் உள்ள மொபைல் எண்ணுக்கு உடனே இ-சலான் அனுப்பப்படும். இ-சலானைக் கொண்டு அபராதத்தைச் செலுத்திக் கொள்ளலாம். இரவு நேரத்திலும் ரேடார் கேமரா அதன் பணியைச் செய்து கொண்டிருக்கும். ஒவ்வொரு இடத்திலும் 4 கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இது மட்டுமல்லாமல், இன்னும் பல்வேறு காரணங்களுக்காக இந்தத் தானியங்கி ரேடார் கேமரா பயன்பட இருக்கிறது. சாலையில் வானகத்தைத் தவறான வழியில் இயக்குவது, குறிப்பட்ட வாகனங்கள் இவ்வழியாகச் சென்று உள்ளனவா என்பதைக் கண்டுபிடிப்பது, கலரைக் கொண்டு வாகனத்தைக் கண்டுபிடிப்பது போன்றவற்றுக்கும் இந்த ரேடார் கேமராக்கள் உதவுகின்றன. இதன் மூலம் அதிக வேகத்தினால் நடைபெறும் சாலை விபத்துகளைக் குறைக்க முடியும்!” என்று கூறினார்.

இது தொடர்பாக சில ஆட்டோ மற்றும் வாகன ஓட்டுநர்களிடம் பேசினோம். ‘‘அதிக வேகத்தினால் நடைபெறும் சாலை விபத்துகளைத் தடுப்பதற்கு இந்த நடைமுறை பயனுள்ளதாக அமையும். இதன் மூலம் இளைஞர்கள் அதிக வேகத்தில் பைக்கில் செல்வது குறையலாம். ஆனால், இந்த நடைமுறை எங்களுக்கு வாழ்வாதாரப் பிரச்னையாக அமைகிறது. சில நேரங்களில் அவசரமாக ரயில் நிலையம் அல்லது மருத்துவமனைக்குச் செல்வதற்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியாது. வேகத்தை அதிகரித்தால் மட்டுமே உரிய நேரத்தில் செல்ல முடியும். அப்போது அபராதத் தொகை விதிக்கப்பட்டால், அன்றைய நாள் சம்பாதித்த பாதித் தொகை அபராதமாகப் போய்விடும். அதன்பிறகு குறைந்த வருமானத்தில் எப்படி எங்கள் குடும்பத்தை நடத்துவது? அதேபோல இரவு நேரத்திலும் இந்த நடைமுறை இருப்பது சிக்கலாக உள்ளது!” என்றனர் சில ஆட்டோ ஓட்டுநர்கள்.

ஸ்பீடு ரேடார் கேமரா

இது டிவிஎஸ் எக்ஸ்எல் போன்ற பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு செட் ஆக வாய்ப்புண்டு. ‘‘என் வண்டிலாம் எவ்வளவு முறுக்கினாலும் 30 கிமீ–யைத் தாண்டாதுங்!’’ என்றார் ஒரு பழைய டூவீலர் வைத்திருந்த ஒருவர். 

‘‘40 கிமீ என்பதை ஒரு 50 கிமீ ஆக்கலாம். என் பைக் 160 சிசி. ஏதோ ஸ்லோ பைக் ரேஸில் போவது போலவே இருக்கும்!’’ என்றார் ஓர் இளைஞர். 

உண்மைதான்; காவல்துறை பாலகிருஷ்ணன் சொன்னதுபோல், பைக்கில் கன்னாபின்னாவென துடுக்குத்தனமாகச் செல்லும் இளைஞர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த இது உதவும்தான்; விபத்துகளைக் குறைக்க வேண்டும் என்பது முக்கியம்தான். ஆனால், ஆட்டோ ஓட்டுநர்கள் சொல்வதுபோல், மற்ற ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமோ என்று தோன்றுகிறது.

எதுக்கும் கோவைவாசிகளே… கார்/பைக் ஆக்ஸிலரேட்டரை முறுக்கும்போது கவனமாக இருக்கோணும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.