நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டிய மசோதாக்களின் நீண்ட பட்டியல் அரசிடம் இருக்கிறது. அதில், முக்கியமானதாகக் கருதப்படுவது டெல்லி சிறப்புச் சட்டம். அதாவது, டெல்லி அரசின் அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்குச் சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதற்குத் தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது.
இதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்றக் கூட்டத்தில் இரு அவைகளிலும், பெரும் எதிர்ப்புக் கூச்சலுக்கு மத்தியில், இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து பேசிய அமித் ஷா, “டெல்லியைப் பொறுத்தவரை எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வருவதற்கு அரசியலமைப்பு, நாடாளுமன்றத்துக்கு முழு உரிமை வழங்குகிறது” என்றார்.
மத்திய அரசின் சட்டத்தை ஆதரித்துப் பேசிய பிஜு ஜனதா தளம் (பி.ஜே.டி) எம்.பி பினாகி மிஸ்ரா, “டெல்லி வழக்கில் நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தையும் இயற்றலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. இந்தச் சட்டத்தை எதிர்க்கும் அனைத்து நடவடிக்கைகளும் அரசியல் மட்டுமே. எனவே, மசோதாவை ஆதரிக்க முழு உரிமை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகள், “வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலம் குறித்து பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும்” எனக் குரலெழுப்பி வலியுறுத்தியதால், இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பரபரப்படைந்தது. லோக் சபா சபாநாயகர் ஓம்பிர்லா காலை 11 மணிக்கு கேள்வி நேரத்தை தொடங்க முயன்றபோது, மணிப்பூர் பிரச்னை குறித்த முழக்கங்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.