“திமுக யாத்திரை நடத்தினால், `எம் மகன், என் பேரன்’ என்று பெயர் வைப்பார்கள்!” – அண்ணாமலை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை பயணத்தில் சிவகங்கை வந்தார். அம்பேத்கர் சிலையில் இருந்து நடைப்பயணத்தை தொடங்கிய அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, தொண்டர்களுடன் அங்கிருந்து மதுரை ரோடு, நெல்லுமண்டி தெரு, கோட்டை முனியாண்டி கோவில் தெரு, வாரச்சந்தை ரோடு வழியாக பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர். நடைபயணத்தின் போது ஆங்காங்கே கூடியிருந்த பொதுமக்கள் பலரும் அண்ணாமலையை சந்தித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து பிரத்யேகமாக கொண்டு வரப்பட்ட திறந்தவெளி வாகனத்தில் இருந்து பேசும்போது, “சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகவே இருக்கிறார். அவருக்கான அரசு ஊதியம் வருகிறது. அமைச்சருக்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளனர். எந்த வேலையுமே செய்யாமல் சிறையில் இருந்தபடியே சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதாகச் சொல்லி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார். உண்மையிலேயே நம்பர் ஒன் மாநிலமாக மாற்றிவிட்டார். ஆம்., இந்தியாவிலேயே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்று மாற்றியிருக்கிறார்.

7 லட்சத்து 53 ஆயிரம் கோடி தமிழக அரசு வாங்கிய மொத்த கடன். குறிப்பாக, சொல்லணும்னா நம்ம ஒவ்வொருத்தர் தலையிலும் ரூ. 3லட்சத்து 52 ஆயிரம் கடன் ஏற்படுத்தி வச்சிருக்காங்க. இது தான் திராவிட மாடல் அரசு. இன்றைய தேதியில் புதிய கடன் ஏதும் வாங்காமல் இருந்தாலே இந்த கடனை வட்டியுடன் அடைக்க இன்னும் 27ஆண்டுகள் ஆகும்.

தமிழகத்தில் 5,500 மதுக்கடைகள் இருக்கு. வேகமாக ஒரு துறை வளர்கிறது என்றால் அது மதுக்கடை துறை தான். மதுவின் மூலம் தமிழக அரசுக்கு வரக்கூடிய வருமானம் 22 சதவீதம் உயர்ந்து இருக்கிறது.

ரூ. 35 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் இன்றைக்கு ரூ. 44 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பனை வந்தால் தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்படும்.

பா.ஜ.க, நாங்கள் நடத்தும் யாத்திரை என்பது என் மண், என் மக்கள் என்ற பெயரில் நடத்துகிறோம். ஒருவேளை தி.மு.க இதுபோன்ற ஒரு யாத்திரையை நடத்தினால், என்ன பெயர் வைத்திருப்பார்கள் தெரியுமா.. `என் மகன், என் பேரன்’ என்ற பெயர் வைத்திருப்பார்கள்.

உதயநிதி ஸ்டாலின் மகன் சமீபத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார். மொபைல் டெக்னாலஜியில் 6ஜி, அதாவது, 6 வது தலைமுறை வந்திருக்கிறது. தி.மு.க குடும்பம் 4ஜி, 4-வது தலைமுறை அரசியலுக்குள் வந்திருச்சு.

இந்தத் தொகுதியின் எம்.பி ஊழல் நிறைந்த எம்.பி.யாக உள்ளார். இதேபோல், முன்னாள் எம்.பி மற்றும் மத்திய அமைச்சரும் ஊழல் நிறைந்தவராகவே இருக்கிறார். இந்தியாவிலேயே ஒரே குடும்பத்தில் தந்தை, தாய், மகன் ஆகிய 3 பேருக்கும் அமலாக்கத்துறை விசாரணை நடப்பது ப.சிதம்பரம் குடும்பத்தில் மட்டும் தான்.

சிவகங்கை எந்த வளர்ச்சியும் பெறவில்லை. சிவகங்கை தொகுதியில் கிராபைட் தொழிற்சாலை கொண்டு வரப்படவில்லை. கொண்டு வந்திருந்தால், பல்லாயிரக்கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும். புகழ்பெற்ற ஆத்தங்குடி டைல்ஸ் பற்றி எல்லாம் இவர்களுக்கு கவலை இல்லை.

எப்போதும் எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ஒரே ஒருவர்  தான். அது மோடி மட்டும் தான். உங்க கூட்டணியில யார் பிரதம வேட்பாளர்ன்னு ஒரு காங்கிரஸ் நண்பர் ஒருத்தர்கிட்ட கேட்டேன். அவர் அழகாகச் சொன்னார். திங்கள்கிழமை நிதிஷ்குமார், அவர் நைட் கிளம்பி போயிடுவாரு. செவ்வாய்கிழமை காலையில மம்தா பானர்ஜி பிரதமர், புதன்கிழமை கே.சி.ஆர், வியாழக்கிழமை உத்தவ் தாக்ரே வருவாரு. அது எல்லாம் சரி, என்ன ராகுல் காந்தி பெயரையே சொல்லலைன்னு கேட்டேன். எங்க தலைவரு, சனி, ஞாயிறு  தான் வருவார்”னு சொன்னார். ஆனால், ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் நாட்டிற்காக உழைத்துக் கொண்டிருப்பவர் தான் நம் உத்தம தலைவர் மோடி” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.