நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும் தொடர் – ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு

புதுடெல்லி,

5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரை இங்கிலாந்து 2-2 என்ற கணக்கில் சமனில் முடித்தது. அத்துடன் 2001-ம் ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சிறப்பையும் தக்க வைத்துக் கொண்டது. முதல் இரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 4-வது டெஸ்ட் மழையால் டிராவில் முடிந்தது. என்றாலும் முந்தைய ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருப்பதால் கோப்பை அந்த அணி வசமே இருக்கும்.

இதனிடையே இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கடைசி இரு விக்கெட்டுகளை சாய்த்து அணிக்கு வெற்றி தேடித்தந்ததுடன், ரசிகர்களின் பாராட்டுகளையும் அள்ளினார். இத்துடன் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றார். 37 வயதான ஸ்டூவர்ட் பிராட் 167 டெஸ்டில் விளையாடி 604 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்கும் தொடர் என்று ஆஷஸ் டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பது டெஸ்ட் கிரிக்கெட்டின் அழகுக்கு ஒரு மரியாதை. மீண்டு எழும் திறன், தன்மையின் ஆழத்தையும், இந்த வடிவம் கோரும் மன உறுதியையும் காட்டுகிறது. இயற்கை அன்னை எங்களுக்கு ஒரு தொடர் முடிவை மறுத்திருக்கலாம், ஆனால் அது இந்த நம்பமுடியாத விளையாட்டின் உணர்வைக் குறைக்கவில்லை. நீண்ட நாட்களாக நினைவில் நிற்கும் தொடர்” என்று பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், “ஒரு அற்புதமான வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. உங்கள் இடைவிடாத பந்துவீச்சும், அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் கிரிக்கெட்டின் வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்படும். உங்கள் வாழ்க்கைக்கு பொருத்தமான முடிவு. அடுத்த இன்னிங்ஸை ரசியுங்கள் ஸ்டூவர்ட் பிராட்” என்று அதில் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.