இரண்டு மாதங்களுக்கு மேலாக மணிப்பூர் மாநிலத்தில் தொடர் வன்முறைகள் அரங்கேறி வரும் நிலையில், இப்போது ஹரியானா மாநிலத்திலும் புதிதாக கலவரம் வெடித்திருப்பதால் வட இந்தியாவில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஹரியானாவிலுள்ள குருகிராமை அடுத்திருக்கும் நூஹ் பகுதியில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் ‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா’ என்கிற பெயரில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை குருகிராம் சிவில் லைன்ஸிலிருந்து பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் தொடங்கி வைத்திருக்கிறார். அந்த அமைப்பினர் பேரணியாக கேத்லா மோட் அருகே சென்று கொண்டிருந்தபோது, இளைஞர்கள் கும்பல் ஒன்று குறுக்கிட்டிருக்கிறது. தொடர்ந்து அவர்கள் பேரணியைத் தொடர அனுமதிக்காததால், இரு தரப்புக்கும் இடையில் மோதல் உருவாகியிருக்கிறது.
இந்த மோதலின் நிலைமை கைமீறிச் சென்று கல்வீச்சு, கார்களுக்கு தீவைப்பது என போர்களமாக அந்த இடம் மாறியிருக்கிறது. சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த போலீஸார், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலவரத்தை ஒடுக்க முயற்சி செய்தனர். ஆனால், வன்முறையாளர்கள் போலீஸார்மீதும் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதில் ஊர்க்காவல்படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் பல போலீஸார் காயமடைந்திருக்கின்றனர். இந்தச் சம்வத்தைத் தொடர்ந்து நூஹ் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் அதிகரித்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதோடு, இணைய வசதியும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. பேரணியில் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட 2,500 பேர், அருகிலுள்ள காவல் நிலையங்கள் மற்றும் கோயில்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
பஜ்ரங் தள் ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ காரணமாக இந்தக் கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது. பஜ்ரங் தள் உறுப்பினரான மோனு மனேசர், அவரின் கூட்டாளிகள் இந்த சர்ச்சை வீடியோவை சில நாள்களுக்கு முன்னர் இணையத்தில் பகிர்ந்ததாகத் தெரிகிறது. பசுவதை செய்யப்பட்டதாக இரண்டு இளைஞர்கள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் இந்த மோனு மனேசர். இவர் பேரணியின்போது தானும் மேவாட் பகுதிக்கு வருவேன் என்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஊர்வலத்தில் இளைஞர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர் என்று போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தக் கலவரம் நூஹ் பகுதியில் மட்டுமின்றி, அருகிலுள்ள குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகிய இரண்டு அமைப்பினருக்கு இடையிலான மோதலாக வன்முறை பரவியிருக்கிறது. இதனால் குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நூஹ் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் மாவட்டங்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று கம்பெனி வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர். வதந்திகள் எதுவும் பரவாமல் தடுக்கும் வகையில் இணையச் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் அமைதி திரும்ப முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். இதேபோல் ஹரியானா முதலமைச்சர் எம்.எல்.கட்டாரும், “ஹரியானா ஒன்று… ஹரியானா மக்களும் ஒருவரே” என்ற முழக்கத்தை எழுப்பி, அமைதி மீண்டும் வர உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மக்கள் அமைதியையும் சகோதரத்துவத்தையும் பேணுமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையே இந்தச் சம்பவத்துக்குக் காரணமான இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர் அதிகாரிகள். ஹரியானாவில் ஏற்பட்டிருக்கும் இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து, அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.