புதுடெல்லி: மணிப்பூரில் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட 2 குகி பழங்குடியினப் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி இனத்தவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது. இதை எதிர்த்து குகி மற்றும் நாகா பழங்குடியின மக்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 மாதமாக நடைபெறும் வன்முறையில் இதுவரை 182-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த மே 4-ம் தேதி குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடையின்றி ஒரு கும்பல் இழுத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இந்த வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இதுதொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 2 பெண்களும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ‘‘எங்களை ஆடையின்றி இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஐஜி அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்க வேண்டும். உள்ளூர் அதிகாரிகள் மீது எங்களுக்கு நம்பிக்கைஇல்லை. அதனால், இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும். எங்கள் அடையாளங்களை வெளியிட கூடாது’’ என்று கோரியுள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. மேலும், வழக்கை வேறு எந்த மாநிலத்தில் விசாரிக்க அனுமதி அளிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த 2 மனுக்களும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.
பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடினார். அப்போது அவர்கூறும்போது, ‘‘இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடத்த வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அதை அரசு தரப்பு ஏற்றுக் கொண்டது.
கபில்சிபல் மேலும் கூறும்போது, ‘‘சம்பவம் கடந்த மே 4-ம் தேதி நடந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இதுதொடர்பான வீடியோஜூலை 19-ம் தேதி வெளியானது. அதன்பிறகு உச்ச நீதிமன்றமே வழக்கை கையிலெடுத்தது. அதன்பிறகுதான் இந்த வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது’’ என்றார்.
அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி,‘‘இந்த வழக்கை மணிப்பூருக்கு வெளியில் வேறு எந்த மாநிலத்துக்கும் மாற்ற ஆட்சேபனை இல்லை’’ என்றார்.
அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி கூறும்போது, ‘‘சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டதில் அரசியல் ரீதியாகவும், வேறு விதமாகவும் பல்வேறு சிக்கல்கள் உள்ளன’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், ‘‘வடகிழக்கு மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும். இந்த 2 பெண்களுக்கு எந்தளவுக்கு நீதி வழங்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோமோ அதேபோல், அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உறுதியாக இருக்கிறோம். புகார்களின் மீது எப்ஐஆர் பதிவு செய்வதை உறுதிப்படுத்த வழிமுறைகளை முன்வைக்க விரும்புகிறோம்’’ என்றார்.
பின்னர், ‘‘மணிப்பூர் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக இதுவரை எத்தனை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று அட்டர்னி ஜெனரலை பார்த்து தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
மணிப்பூரில் 2 பெண்களுக்கு எதிராக கடந்த மே 4-ம் தேதி நடந்த வன்முறை மிகவும் கொடூரமானது. இதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்ய தாமதம் செய்தது ஏன்? மணிப்பூரில் வன்முறை தொடர்பாக இதுவரை எத்தனை எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அல்லது சிபிஐ விசாரணை மட்டும் போதாது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவர்களின் இல்லத்துக்கே நீதி சென்றடைய வேண்டும். மணிப்பூரில் இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் எத்தனை வழக்குகள் பெண்களுக்கு எதிரானவை?
எத்தனை வழக்குகள் வேறு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு சட்ட உதவிவழங்கும் விஷயத்தில் தற்போதைய நிலவரம், இதுவரை 164-வது சட்டப் பிரிவின் கீழ் எத்தனை பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது போன்ற அனைத்து விவரங்களையும் மத்திய, மாநில அரசுகள் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விஷயத்தில் பெண் நீதிபதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழுவை நியமிப்போம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணைஇன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது.