மணிப்பூர் விவகாரம் | ஆக.8-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்; ஆக.10-ல் பிரதமர் மோடி பதிலுரை

புதுடெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் 8-ஆம் தேதி முதல் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 10-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் மைத்தேயி – குகி இனத்தவர் இடையே கடந்த மே மாதம் 3-ஆம் தேதி முதல் மோதல் நடந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 19 ஆம் தேதி ஒரு வீடியோ வெளியாகி வைரலானது. குகி ஸோ இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் அந்த வீடியோ ஒட்டுமொத்த தேசத்தையும் உறையவைத்தது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்கக் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாள் தொடர்ந்து தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 8-வது நாளாக நேற்று வரை முடங்கியது.

முன்னதாக, ஜூலை 26 ஆம் தேதி மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி. கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அவருடன் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மக்களவைத் தலைவர் நாகேஸ்வர் ராவும் தனியாக ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். காங்கிரஸ் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை இண்டியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன.

மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் அறிவித்ததோடு விவாதத்துக்கான நாளை பின்னர் அறிவிப்பதாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 10-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 11-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் காரணமாக அவை அலுவல் நாட்கள் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதனிடையே, மணிப்பூரில் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட 2 குகி பழங்குடியினப் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. வாசிக்க > மணிப்பூரில் ஆடையின்றி இழுத்துச் செல்லப்பட்ட 2 பெண்கள் எஸ்ஐடி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்க உத்தரவு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.