மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் படம் எப்போது துவங்குகிறது?
உதயநிதி, வடிவேலு நடித்த மாமன்னன் படத்தை இயக்குவதற்கு முன்பே துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார் மாரி செல்வராஜ். அதற்காக சில மாதங்களாக துருவ் விக்ரம் கபடி விளையாட்டு பயிற்சியும் எடுத்து வந்தார். ஆனால் திடீரென்று அந்த படத்தை தள்ளி வைத்து விட்டு மாமன்னன் படத்தை தொடங்கினார். இந்நிலையில் தற்போது மீண்டும் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி இருக்கிறார் மாரி செல்வராஜ். ஆகஸ்ட் மாதம் இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்க உள்ளது. மேலும், இந்த படம் தமிழக கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இந்த கபடி வீரர் கணேசன், ஆசிய அளவிலான கபடி விளையாட்டுகளில் பங்கேற்று சாதனை புரிந்ததோடு, மத்திய அரசின் அர்ஜூனா விருதினை பெற்றவர். மேலும் மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படம் 1990 காலகட்ட பின்னணியில் உருவாகிறது.