மகாராஷ்டிராவில் மும்பையில் இருந்து நாக்பூர் வரை சம்ருத்தி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இச்சாலையில் பெரும் பகுதி போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய பகுதி அதாவது ஷீரடியில் இருந்து மும்பை வரையிலான பகுதியில் கட்டுமானப்பணி நடந்து கொண்டிருக்கிறது. இச்சாலைக்காக மும்பை அருகில் உள்ள தானே மாவட்டத்தில் இருக்கும் இருக்கும் சஹாப்பூர் அருகில் உள்ள சர்லம்பே என்ற கிராமத்தில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. நேற்று இரவு இப்பாலத்திற்கு தேவையான இரும்பு தூண்களை ராட்சத கிரேன்களை கொண்டு நிலை நிறுத்தும்பணி நடந்து கொண்டிருந்தது.
இப்பணியில் பொறியாளர்கள், தொழிலாளர்கள் என்ற 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவில் இப்பணி நடந்து கொண்டிருந்த போது திடீரென இரும்பு தூண்களை தூக்கிய கிரேன் சாய்ந்துவிட்டது. இதில் சிக்கி 17 தொழிலாளர்கள் இறந்து போனார்கள். மேலும் 6 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும்பணி நடந்து வருகிறது. இது தவிர காயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மேலாண்மைப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிரேன் உயரத்தில் இருந்து விழுந்துவிட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இச்சாலையை வரும் மக்களவை தேர்தலுக்கு முன்பாக கட்டி முடித்து திறக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கட்டுமானப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அதேசமயம் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட இச்சாலையின் பெரும்பகுதி சரியாக திட்டமிடப்படாமல் கட்டப்பட்டதாலும், போதிய பாதுகாப்பு வசதி செய்யப்படாததாலும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது மீண்டும் கட்டுமானப்பணி நடைபெறும் இடத்திலும் விபத்து நடந்து இருப்பது மகாராஷ்டிரா அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது.