மும்பை: ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படையை (ஆர்பிஎஃப்) சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட காவலர் ஒருவர் தனது உயரதிகாரி உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்ப முயன்ற காவலரை போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை (மேற்கு ரயில்வே) ஐ.ஜி. பிரவீன் சின்ஹா கூறியதாவது. ஜெய்ப்பூர் – மும்பை சென்ட்ரல் அதிவிரைவு ரயில் (12956) ஜெய்ப்பூரில் இருந்து புறப்பட்டு மும்பை நோக்கி வந்துகொண்டிருந்தது. மும்பை ரயில் நிலையத்தை அடைவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பாக, நேற்று (ஜூலை 31) அதிகாலை 5 மணி அளவில் வைதர்னா ரயில் நிலையத்தை கடந்தபோது, பால்கருக்கு அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
அந்த ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர்சேத்தன் சிங்குக்கும் (33), அவரதுஉயரதிகாரியான உதவி எஸ்.ஐ. டிக்காராம் மீனாவுக்கும் (57) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாக்குவாதம் முற்றியதில் சேத்தன் சிங் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் டிக்காராம் மீனாவை நோக்கி 10 முறை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், டிக்காராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கியால் 12 முறை சுட்டார்: அதன்பிறகும் கோபம் தீராத சேத்தன் சிங், அருகில் இருந்த பயணிகளின் பெட்டிகளுக்கு சென்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், அப்துல் காதிர், அஷ்கர் கேய் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு பயணி என 3 பேர்உயிரிழந்தனர். சேத்தன் சிங் தனது துப்பாக்கியால் மொத்தம் 12 முறை சுட்டதாக அருகில் இருந்த பயணிகள் கூறினர்.
தஹிசார் அருகே அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, சேத்தன் சிங் தப்பிக்க முயன்றார். ஆனால், அவரை போலீஸார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை போரிவிலி ரயில் நிலைய காவலர்கள் மீட்டனர்.
மனநலப் பிரச்சினையால் சேத்தன் சிங் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளார். விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பிய நேரத்தில் தனது உயரதிகாரியையும், எதிரே வந்தவர்களையும் அவர் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
சேத்தன்சிங் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸை சேர்ந்தவர். இவர்களுடன் மேலும் 2 ஆர்பிஎஃப் வீரர்களும் ரயிலில்பயணித்துள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் போலீஸார்ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பிரவீன் சின்ஹா தெரிவித்தார்.
ரூ.15 லட்சம் நிவாரண நிதி: உயிரிழந்த உதவி எஸ்.ஐ. டிக்காராம் மீனா, ராஜஸ்தானின் மாதேப்பூரை சேர்ந்தவர். அவர் தனது தாயார், மனைவி, 2 பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் 2025-ம் ஆண்டுடன் ஓய்வுபெற இருந்த நிலையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்த உதவி எஸ்.ஐ. டிக்காராம் மீனாவின் குடும்பத்துக்கு ரயில்வே பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.15 லட்சம், இறுதிச்சடங்கு செலவுக்காக ரூ.20 ஆயிரம்,ஓய்வூதிய பலன் ரூ.15 லட்சம், காப்பீட்டுத்தொகை ரூ.65,000 வழங்கப்படும் என்றுஅதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மற்ற3 பயணிகளின் உறவினர்கள், தங்களுக்கும்ரயில்வே துறை நிவாரண உதவி அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.