தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்குட்பட்ட கீரப்பாக்கம் – காரணை புதுச்சேரி அருங்கல் சாலையில் இன்று (01.08.23) அதிகாலை 3.30 மணியளவில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கார் அவ்வழியாக வந்த கறுப்பு நிற சொகுசு காரை போலீஸ் எஸ்.ஐ சிவகுருநாதன் நிறுத்த முயன்றார். அப்போது அந்தக் கார், எஸ்.ஐ சிவகுருநாதன் மீது மோதுவது போல சென்றது. பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது மோதி சொகுசு கார் நின்றது.
உடனே காரின் அருகே சென்ற போலீஸ் எஸ்.ஐ சிவகுருநாதன், காருக்குள் இருந்தவர்களை கீழே இறங்கும்படி கூறினர். அப்போது திடீரென ஒருவன், தான் கையில் வைத்திருந்த அரிவாளால், போலீஸ் எஸ்.ஐ சிவகுருநாதனை வெட்டினார். இதில் அவரின் இடது கையில் வெட்டு காயம் விழுந்தது. அடுத்து அந்த நபர் எஸ்.ஐ சிவகுருநாதனின் தலையில் வெட்ட முயன்றார். அதனால் , சுதாரித்துக் கொண்ட போலீஸ் எஸ்.ஐ சிவருகுநாதன், கீழே குனிந்தார். இதில் சிவகுருநாதனின் தொப்பியில் அரிவாள் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்ற போலீஸாரும் சிவகுருநாதனை காப்பாற்ற ஓடி வந்தனர்.
அதோடு காரிலிருந்தவர்களை மடக்கிப் பிடிக்க முயன்றனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், துப்பாக்கியை எடுத்து காரில் வந்த கும்பலை சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால் அவர்களோ போலீஸாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் முருகேசனும் போலீஸ் எஸ்.ஐ சிவகுருநாதனும் தங்களின் தற்காப்புக்காக துப்பாக்கியை எடுத்து சுட்டனர். இதில் இரண்டு பேர் மீது குண்டுகள் பாய்ந்து அவர்கள் சுருண்டு விழுந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போலீஸார் கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு பேர் இறந்த தகவல் தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜுக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். இந்தச் சம்பவத்தில் வெட்டு காயமடைந்த சிவகுருநாதனும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவரிடம் போலீஸ் உயரதிகாரிகள் நலம் விசாரித்தனர். பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் என்ன நடந்தது என்று போலீஸ் உயரதிகாரிகள் விசாரித்தனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர், “போலீஸ் எஸ்.ஐ சிவகுருநாதனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றது ஓட்டேரியைச் சேர்ந்த பிரபல ரௌடிகள் சோட்டா வினோத், மண்ணிவாக்கம் ரமேஷ் என்பது விசாரணையில் தெரியவந்தது. இவர்கள் பா.ஜ.கவைச் சேர்ந்த பிரபல ரௌடி ஒருவருக்கு வலது கரமாக இருந்து வந்தனர்.
பின்னர் அந்த பிரபல ரௌடியிடமிருந்து பிரிந்த சோட்டா வினோத், தன்னுடைய நண்பனான ரமேஷிடன் சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புகூட மணிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் தி.மு.க பிரமுகர் சக்கரபாணி என்பவரை வெட்டிய வழக்கில் சோட்டா வினோத் மற்றும் ரமேஷை போலீஸார் தேடிவந்தனர். இந்தச் சூழலில்தான் சோட்டா வினோத், ரமேஷ் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுடன் சொகுசு காரில் வந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றபோதுதான் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்திருக்கிறது. போலீஸார், மூன்று ரவுண்ட் சுட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
என்கவுன்டர் செய்யப்பட்ட பிரபல ரௌடி வினோத் மீது 10 கொலை வழக்கு உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ரமேஷ் மீது 5 கொலை வழக்கு உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்வதில் இந்த டீம் ஸ்பெஷலிஸ்ட். மேலும் சென்னை புறநகர் பகுதியில் மாமூல் கேட்டு தொடர்ந்து சோட்டா வினோத், ரமேஷ் டீம் தொல்லைக் கொடுத்து வந்ததாகவும் எங்களுக்கு புகார்கள் வந்திருக்கின்றன. தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றார்.