கொல்கத்தா,
மணிப்பூரில் தொடரும் கலவரம் அனைத்து தரப்பினரையும் கவலை அடைய வைத்துள்ளது. இந்த வன்முறை சம்பவங்களை கண்டித்து மேற்கு வங்காள சட்டசபையில் நேற்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
சட்டசபை விவகாரத்துறை மந்திரி சொவந்தேப் சட்டோபாத்யாய் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த மசோதா மீது பேசிய முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கலவரத்தை அடக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்தார்.
அவர் கூறும்போது, ‘மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி அறிக்கை வெளியிட வேண்டும். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல முடியாதது வெட்கக்கேடு. மணிப்பூரில் அமைதி ஏற்படுத்த பிரதமரால் முடியாவிட்டால், அதற்கு ‘இந்தியா’ கூட்டணியை அனுமதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அதேநேரம் பா.ஜனதாவை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி இந்த தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்தார். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என கூறிய அவர், இது குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என்றும் கூறினார்.
பின்னர் இந்த தீர்மானத்தை கண்டித்து பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனாலும் இந்த தீர்மானம் நிறைவேறியது.