மோசடி மன்னனுடன் இணைத்து அவதூறு : ஜாக்குலின் மீது நோரா வழக்கு
பெங்களூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு தற்போது டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடியே அவர் தொழிலதிபர்களிடம் 200 கோடி மோசடி செய்தார். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நடிகை நோரா பதேகி டில்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கனடா நாட்டு குடியுரிமை பெற்றுள்ள நான் இந்தியாவில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறேன். எனக்கு தொடர்பே இல்லாத 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் ஜாக்குலின், என்னை இழுத்து விட்டுள்ளார். அவதூறாக பேசி உள்ளார். மீடியாக்கள் மூலம் எனது நற்பெயரை கெடுத்துவிட்டார். இதனால் எனக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறேன்.
200 கோடி மோசடி வழக்கிற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிலரை பாதுகாக்க என்னை பலிகடா ஆக்கி உள்ளனர். நான் வெளிநாட்டவர் என்பதால் என் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். இதனால் ஏற்பட்ட எனது தொழில் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தொழில் முறையில் என்னுடன் போட்டியிட முடியாத ஜாக்குலின் மோசமான நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.
சுகேசிடம் இருந்து நான் பரிசு பொருட்களை பெற்றதாக என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவருடன் செல்போனில் தான் பேசினேன். அவரது மனைவிதான் எனக்கு செல்போன் பரிசளித்தார். சுகேஷிடமிருந்து எந்த பரிசும் வாங்கவில்லை. சுகேஷிடமிருந்து நான் கார் வாங்கியதாக கூறியது தவறு. எனது மைத்துனர் பாபிகான் ஒரு படம் இயக்குவதற்காக அவருக்கு சம்பளத்திற்கு பதிலாக வழங்கப்பட்ட கார் அது. எனவே என்மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் ஜாக்குலின் மீது நடவடிக்கை எடுத்து அவரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.
இவ்வாறு தனது வழக்கு மனுவில் நோரா பதேகி கூறியுள்ளார்.