மதுரை: பட்டா நிலங்களில் ஆழ்குழாய் கிணறு தோண்டி தண்ணீர் விற்ற வழக்கில் தமிழக நீர்வளத் துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகாசி ஆணையூர் அண்ணாமலையார் காலனியைச் சேர்ந்த ஏ.எஸ்.கருணாகரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பலர் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். பட்டா நிலங்களில் பல நாட்களாக பயன்பாடு இல்லாமல் மூடப்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்து அதில் வணிக நோக்கத்தில் தண்ணீர் எடுத்து விற்கின்றனர். இதை அனுமதித்தால் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் வற்றிப்போக வாய்ப்புள்ளது. எனவே, அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதியில் பட்டா நிலங்களில் ஆழ்குழாய் கிணறு அமைத்து வணிக நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிட்டார். பின்னர் நீதிபதி, ”இந்த வழக்கில் நீர்வளத் துறை செயலாளரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கிறது. அவர் தமிழகத்தில் நிலத்தடி நீரை வணிக ரீதியாக எடுப்பது தொடர்பாக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? நிலத்தடி நீரை வணிக ரீதியாக எடுப்பது குறித்து சட்டம் நிறைவேற்ற அரசு ஏதேனும் முன்னெடுப்பு எடுத்துள்ளதா?
வணிக ரீதியாக தண்ணீர் எடுக்க விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தடையில்லாச் சான்றிதழ்/அனுமதி வழங்குவதற்கு உள்ளூர் மட்டத்தில் தகுதியான அதிகாரி யார்? உரிமம் பெற்றவர்கள் தண்ணீரை எடுக்க அனுமதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறும் பட்சத்தில் என்ன தண்டனை வழங்கப்படும்? என்ற கேள்விக்கு நீர்வள ஆதாரத் துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 9-ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.