சென்னை: நிறுவனங்கள் தரப்பில் எழுப்பிய சந்தேகங்களுக்கு ஏற்ற வகையில் டெண்டர் விதியில் திருத்தம் செய்யப்பட உள்ளதால், வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான டெண்டரை மின்வாரியம் ரத்து செய்துள்ளது.
வீடுகளில் மின் பயன்பாட்டை கணக்கிடுவதில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துமாறு அனைத்து மாநில மின்வாரியங்களுக்கும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, வீடுகளுக்கு ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தும் பணியை தமிழ்நாடு மின்வாரியம் மேற்கொண்டது.
இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கான டெண்டர் செயல்முறை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் மூன்று தொகுப்புகளாக மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக, மேற்கு மாவட்டங்களில் சுமார் ஒரு கோடி ஸ்மார்ட்மீட்டர்களும், தென் மாவட்டங்களில் 80 லட்சம் மீட்டர்களும் பொருத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டது.
அதில் பங்கேற்க, கடந்த ஜூன் 5-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. பின்னர், டெண்டர் கடைசி தேதி, மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டருக்கான டெண்டரை மின் வாரியம் ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, ‘‘மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில், தமிழகத்தில் வீடுகளுக்கு ஸ்மார்ட்மீட்டர் பொருத்த தமிழக மின்வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக, டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் விளக்கக் கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. இந்நிறுவனங்கள் தரப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதற்கு ஏற்ப டெண்டர் விதிகளில் திருத்தம் செய்யப்பட உள்ளது. எனவே, நிறுவனங்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில் விவரங்கள் இடம்பெறுவதுடன், 3 தொகுப்புகளுக்கும் சேர்த்து புதிய டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.