திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் பொன்மலை அருகே திருச்சி-சென்னை வழிதடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் முக்கியமான ரயில்கள் வந்து செல்லும் போது ரயில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இதனை கருத்தில் திருச்சி ரயில்வே சந்திப்பில் புதிய வழித்தட எண் 10 மற்றும் புதிய நடைமேடை எண் 8 ஆகியவற்றை இயக்குவதற்கு கடந்த 20 ஆம் தேதி முதல் இண்டர்லாக்கிங் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் ஒன்றாம் தேதியான இன்று 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி திருச்சி – ராமேஸ்வரம், திருச்சி – ஈரோடு, திருச்சி – தஞ்சை பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும், தஞ்சை – மயிலாடுதுறை, மயிலாடுதுறை – விழுப்புரம், திருச்சி – கரூர், திருச்சி – காரைக்கால், கரூர் – திருச்சி, திருச்சியில் இருந்து புறப்படும் டெமு முன்பதிவு செய்யப்படாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், கரூர் – திருச்சி டெமு முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், அரக்கோணம் – வேலூர் உள்ளிட்ட 12 பயணிகள் ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பணிகள் காரணமாக 20க்கும் மேற்பட்ட ரயில்கள் குறைந்த பட்சம் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ரயில்களும், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களும் பராமரிப்புப் பணிகளால் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் ஆகஸ்ட் மூன்றாவது வாரம் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொதிகை, பாண்டியன் மற்றும் நெல்லை அதிவிரைவு ரயில்களில் செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பல பயணிகள் ரயிலுக்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் சிலர் பேருந்துகளில் ஏறி சென்றனர். எனினும், முன்பதிவு செய்து ரயில்களில் பயணம் செய்யாத பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுமாறும் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.