சென்னையில் மெட்ராஸ் போட் கிளப்பில் கொழும்பு ரோவிங் க்ளப் மற்றும் மெட்ராஸ் போட் கிளப்புக்கும் இடையே படகுப் போட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருந்தது. 82 வருடங்களாக நடக்கும் இப்போட்டி ஒரு வருடம் சென்னையிலும் ஒரு வருடம் கொழும்புவிலும் மாறி மாறி நடைபெறும்.
தீபம் கோப்பைக்காக ஆண்களும் அடையார் கோப்பைக்காக பெண்களும் ஆக்ரோஷமாகப் போட்டியிடுவார்கள். கொரோனா பெருந்தொற்று காரணமாக மூன்று வருடம் முடங்கி இருந்த இப்போட்டி தற்போது கோலாகலமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இப்போட்டியை ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
ஒருவர், இருவர், நால்வர், குழுவாக என நால்வகை பிரிவுகளில் இப்போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு அணி சார்பாகவும் 18 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக ஏழு துணை வீரர்களும் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் கொழும்பு ரோவிங் அணியும், பெண்கள் பிரிவில் மெட்ராஸ் போட் கிளப் அணியும், ஒட்டுமொத்தமாக கொழும்பு ரோவிங் க்ளப் அணியும் வென்றன.
இது குறித்து பேசிய படகு போட்டியின் நிர்வாகக் குழுவினர், “ஒவ்வொரு விளையாட்டுக்கும் வரலாறு உண்டு. களத்தில் இறங்கி விட்டால் ஒவ்வொருவரும் வீரனே. இத்தனை ஆண்டுகளாக இவ்விளையாட்டில் போட்டியிருக்கிறதே தவிர பொறாமை இருந்ததில்லை” எனக் கூறினர்.