புதுடில்லி:நாடு முழுதும், ‘டார்க் நெட்’ எனப்படும், எளிதில் யாரும் அணுக முடியாத இணையதளத்தை பயன்படுத்தி, போதைப் பொருட்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த மூன்று பேரை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
புதுடில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மையமாக வைத்து போதைப் பொருள் கும்பல் இயங்கி வருவதாக, போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, படித்த 21 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் சிலர் இணைந்து, எல்.எஸ்.டி., எனப்படும் போதைப்பொருளை இறக்குமதி செய்து நாடு முழுதும் விற்பனை செய்தது தெரியவந்தது.
கடந்த ஜூனில், இந்தக் கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்து விசாரணை நடத்தியதில், போதைப் பொருள் சப்ளை செய்யும் முக்கிய நபர்கள் குறித்த தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அதிகாரிகள் நடத்திய வேட்டையில், ‘ஜாம்படா’ என்ற பெயரில் சர்வதேச போதைக் கும்பலுடன் இணைந்து டார்க்நெட் இணையதளத்தை பயன்படுத்தி, மிகப்பெரிய அளவில் இயங்கி வந்ததை கண்டறிந்து, மூன்று பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து அந்தப் பிரிவின் துணை டைரக்டர் ஜெனரல் ஞானேஷ்வர் சிங் கூறியதாவது:
இளம் வயதினரை குறிவைத்து டார்க்நெட் இணையதளத்தை பயன்படுத்தி இந்தப் போதைக் கும்பல் இயங்கி வந்தது. இதற்காக, கிரிப்டோகரன்சி வாயிலாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இந்த கும்பலில் இயங்கிய மூன்று முக்கிய நபர்களை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் 26.73 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இக்கும்பலுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பதை கண்டறியும் வகையில், கைதான நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement