கொழும்பு : ‘-சர்ச்சைக்குரிய 13வது சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவதன் வாயிலாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை தமிழர்களுக்கு வழங்க வேண்டும்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில் வசித்து வரும் தமிழர்கள், தங்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகின்றனர்.
கடந்த 1987ல் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இலங்கை அரசியல் சட்டத்தில் இதற்கான ’13 ஏ’ சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.
தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை தற்காலிகமாக இணைக்கவும், தமிழர்களுக்கு அதிகார பரவல் அளிக்கவும் வகை செய்யும் இந்த திருத்தம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
சில மாதங்களுக்கு முன், இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே, போலீஸ் அதிகாரத்தை தவிர்த்து, 13 ஏ திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
சமீபத்தில், நம் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக வந்த அவரிடம், 13 ஏ சட்டதிருத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பிரதமர்நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இதையடுத்து, இலங்கையில் கடந்த வாரம் நடந்த அனைத்து கூட்டத்தில், இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக அமல்படுத்தப் போவதாக ரணில் தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இலங்கையின் பிரதான தமிழ்க் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, ‘1956 முதல் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.
‘ஆகையால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்கி மாகாண தேர்தலை நடத்த வேண்டும்’ என கூறியுள்ளது.
இதற்கிடையே, அடுத்த ஆண்டு இறுதியில் அங்கு தேர்தல் வர உள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்கேவின் அதிகாரப் பகிர்வு அறிவிப்பு அரசியல் ‘ஸ்டண்ட்’ என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
மீனவர் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை அமைச்சர் தகவல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்