`இது நம்மால் முடியாது என எது ஒன்றையும் கைகழுவிவிடுவதில்தான் நம் பலவீனம் உறைந்திருக்கிறது. எதையும் ஒரு முறை முயன்று பார்த்துவிடுவதுதான் வெற்றிக்கான உறுதியான வழி.’ – தாமஸ் ஆல்வா எடிசன்.
`இனி அவ்வளவுதான்’ என்று நம்மை நாமே நொந்துகொள்ளும் தருணம்தான் நம் முன்னேற்றத்தை அடியோடு வீழ்த்திவிடும் ஆயுதம். அந்த நிலையைக் கடந்துவிட்டோமென்றால் எதிலும் வெற்றியே! `இது வேலைக்காகாது’ என்று ஒரு தொழிலையோ, வேலையையோ, எந்த ஒரு செயலையோ விட்டுவிடுவதற்கு முன்பு யோசிக்க வேண்டும். திரும்பத் திரும்ப முயன்று பார்க்க வேண்டும் என்பதற்கு உதாரணம், இலங்கை கிரிக்கெட் வீரர் மார்வன் அட்டபட்டுவின் (Marvan Atapatu) வாழ்க்கை.
கிரிக்கெட், ஆச்சர்யங்களுக்கும் அற்புதங்களுக்கும் குறைவில்லாத விளையாட்டு. இரண்டு ரன்கள் மட்டுமே எடுக்கவேண்டிய சூழலில் கடைசி பந்து சிக்ஸுக்கு எகிறும்; ஒரு ரன் மட்டுமே எடுக்கவேண்டிய சூழலில் லாஸ்ட் பேட்ஸ்மேன் அவுட்டாகி வெற்றி பறிபோகும். இதெல்லாம் கிரிக்கெட்டில் சர்வ சாதாரணம். இவை மட்டுமல்ல, சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கைக் கதைகூட நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு. பத்திரிகையாளரும், கிரிக்கெட் கமென்டேட்டருமான ஹர்ஷா போக்லே (Harsha Bhogle) அடிக்கடி பொதுவெளியில் ஓர் உண்மைக்கதையைப் பகிர்ந்துகொள்வார். அது, மார்வன் அட்டபட்டுவின் வாழ்க்கை.
முழுப்பெயர், மார்வன் சாம்சன் அட்டபட்டு (Marvan Samson Atapattu). இலங்கையின் மிக முக்கிய விருதான `தேசபந்து’ விருதைப் பெற்றவர். 17 வருடங்கள் இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். இலங்கை கிரிக்கெட் அணியின் கோச்சாக இருந்தவர். டெஸ்ட் விளையாட்டுகளில் ஆறு இரட்டைச் சதங்களை எடுத்தவர்… இந்தப் பெருமையெல்லாம் சாதாரணமாக அவருக்கு வந்துவிடவில்லை.
`உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு புள்ளியில் தோல்வி என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், முடியாது என்று ஒன்றை விட்டுவிடுவது மன்னிக்க முடியாதது.’ – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
இலங்கையிலிருக்கும் கலுதாரா (Kalutara) என்ற நகரத்தில் 1970-ம் ஆண்டு பிறந்தவர் மார்வன் அட்டபட்டு. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே கிரிக்கெட் விளையாட்டில் அவருக்கு அப்படியோர் ஈடுபாடு. 1990-ல் இலங்கை கிரிக்கெட் அணியில் அவர் சேர்ந்து முதல் ஆட்டத்தில் களமிறங்கியபோது அவருக்கு வயது 20. அது, இந்தியாவுக்கு எதிராக இலங்கை விளையாடிய டெஸ்ட் மேட்ச். இந்தியாவில், சண்டிகரில் நடந்தது. மார்வன் அட்டபட்டு ஏழாவது பேட்ஸ்மேனாகக் களமிறங்கினார். ஸ்கோர் – 0. இரண்டாவது இன்னிங்ஸ்… அதிலும் அவர் பெற்ற ரன்கள் – 0.
கிரிக்கெட் கமிட்டி, “ஐயா சாமி… கெளம்புய்யா!’’ என்று கும்பிடுபோட்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவைத்தது. யாராக இருந்தாலும், அந்தச் சூழலில் கிரிக்கெட் விளையாட்டுக்கு முழுக்குப் போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பியிருப்பார்கள். அட்டபட்டு, `நம்மகிட்டதான் பிரச்னை இருக்குபோல. பிராக்டீஸ் பத்தலை’ என்று நினைத்தார். அடுத்த சான்ஸ் கண்டிப்பாகத் தேடிவரும் என்று நம்பினார். மறுபடியும் நெட் கடுமையாகப் பயிற்சியில் இறங்கினார். ஒவ்வொரு நாளும் மறுபடியும் அழைப்பு வரும்… வரும்… என்று காத்திருந்தார். இப்படி அவர் 21 மாதங்கள் காத்திருந்தார். அழைப்பு வந்தது.
அது, தங்கமான வாய்ப்பு. கிரிக்கெட் ரசிகர்கள் அவரை நம்பினார்கள். `இந்தப் பையன் நல்லா பிராக்டீஸ் பண்றாருன்னு சொல்றாங்க. இந்த தடவை ஏமாத்த மாட்டாருன்னு நம்புவோம்’ என நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். மார்வன் அட்டபட்டுவேகூட கொஞ்சம் நம்பிக்கையோடுதான் களமிறங்கினார்.
நடந்தது துயரம். முதல் இன்னிங்ஸில் அவர் பெற்ற ரன்கள் – 0. இரண்டாவது இன்னிங்ஸில் எடுத்த ரன் – 1. கிரிக்கெட் கமிட்டிக்கு வேறு வழி தெரியவில்லை. “ஐயா… வீட்டுக்குக் கெளம்பு’’ என்று சொல்லி வழியனுப்பியது. இந்தச் சூழலில் ஒருவர் என்ன செய்வார்? `இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்?’ என்று கிரிக்கெட்டுக்கே கும்பிடு போட்டுவிட்டுப் போயிருப்பார், மாறாக, அட்டபட்டு மறுபடியும் கிரிக்கெட் பிராக்டீஸில் இறங்கினார். பயிற்சி… பயிற்சி… பயிற்சி. கூடவே வாய்ப்புக்கான காத்திருப்பு. 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வாய்ப்பு அவர் வீட்டுக் கதவைத் தட்டியது.
`திருப்தி என்பது அடைவதில் கிடைக்காது; முயற்சியால்தான் கிடைக்கும். முழு முயற்சிதான் முழு வெற்றியைத் தரும்.’ – மகாத்மா காந்தி.
மூன்றாவதாக ஒரு வாய்ப்பு. உலகிலுள்ள கிரிக்கெட் ரசிகர்களெல்லாம் `இந்த இளைஞர் என்ன செய்யப்போகிறார்?’ என்று ஆவலோடு காத்திருந்தார்கள். முதல் இன்னிங்ஸ். மார்வன் அட்டபட்டு எடுத்த ரன் – 0. இரண்டாவது இன்னிங்ஸ். அட்டபட்டு எடுத்த ரன் – 0. கிரிக்கெட் கமிட்டிக்கு அவர்மேல் இருந்த நம்பிக்கை சுத்தமாகப் போய்விட்டது. அட்டபட்டு வேதனையோடு அணியிலிருந்து வெளியேறினார். ஆனால், `நம் கிரிக்கெட் வாழ்க்கை மூடுவிழா கண்டுவிட்டது’ என்று அவர் நினைக்கவில்லை.
தன்னுடைய துரதிர்ஷ்டத்தை நொந்துகொள்ளவில்லை. அந்தக் கணத்திலும் அந்த மனிதருக்கு, தன் மேல் நம்பிக்கை அதிகரித்தது என்பதுதான் ஆச்சர்யம். இன்னும் தீவிரமாகப் பயிற்சியில் இறங்கினார். `ஒரு நாள் நான் யார் என இந்த உலகுக்கு நிரூபிப்பேன்’ என தன்னம்பிக்கையோடு பயிற்சி செய்தார். அதுவரை அவர் விளையாடியது ஆறு இன்னிங்ஸ். ஐந்தில் 0 ரன்கள். ஒன்றில் 1 ரன். இப்படிப்பட்ட மனிதருக்குத் திரும்ப ஒரு நாட்டின் கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு வருமா… அந்த அதிசயம் நிகழ்ந்தது. திரும்பவும் கிரிக்கெட் விளையாடும் வாய்ப்பு.
மூன்று வருடங்களுக்குப் பிறகு அவருக்கு அழைப்பு. 1997-ல் இலங்கையில் நடந்த ஒரு நாள் போட்டியில் தன் முதல் சதத்தைப் பதிவுசெய்தார் மார்வன் அட்டபட்டு. அந்தப் போட்டியில் அவர் எடுத்த ரன்கள் 118. அதே ஆண்டு நவம்பரில் இந்தியாவில் நடந்த போட்டியிலும் சதமடித்தார். அதில் அவர் எடுத்த ரன்கள் 108. மெல்ல மெல்ல அவர் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் நம்பிக்கைகொள்ள ஆரம்பித்தார்கள். இலங்கைக்காக விளையாடி 5,000 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கிறார் அட்டபட்டு. அவற்றில் 16 சதங்களும், 6 இரட்டைச்சதங்களும் அடங்கும். இலங்கை அணியின் கேப்டனாகக் களமிறங்கி 2004-ம் ஆண்டு ஆசிய கோப்பையை வென்றார்.
இந்தச் சாதனைகளுக்கெல்லாம் அடிப்படை, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் அவர் பொறுமையாக வாய்ப்பு வரும் வரை காத்திருந்தது; பயிற்சியை விடாமல் மேற்கொண்டது. தோல்வியோ, நிராகரிப்போ நமக்கு வருகிறதா… துவண்டு போய்விடக்கூடாது; பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். முயற்சியை மட்டும் ஒருபோதும் விட்டுவிடக் கூடாது. தொடர் முயற்சிக்குப் பலன் கிடைக்கும் என்பதுதான் மார்வன் அட்டபட்டு எடுத்துச் சொல்லும் பாடம்!